Panguni Uthiram 2025 (Photo Credit: Team LatestLY)

ஏப்ரல் 10, சென்னை (Festival News): பங்குனி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் இணைந்து வரக்கூடிய நாள் 'பங்குனி உத்திரம்' (Panguni Uthiram) ஆக கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்றாக பங்குனி உத்திரம் கருதப்படுகிறது. இந்நாளில் ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்து வந்தும், பால்குடம் ஏந்தி வந்தும் முருகப் பெருமானை வழிபடுவது வழக்கம். Panguni Uthiram 2025: பங்குனி உத்திரம் 2025 எப்போது? பூஜைகள் மற்றும் விரத முறைகள் குறித்த முழு விவரம் இதோ..!

பங்குனி உத்திரம்:

பல தெய்வீக திருமணங்கள் நடைபெற்ற நாளாக பங்குனி உத்திரம் கருதப்பட்டாலும், இது தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்குரிய (Lord Muruga) நாளாக முக்கிய விரத நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதால், திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்வுகள் நடைபெறுவதில் இருக்கும் தடைகள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இந்த 2025ஆம் ஆண்டு, பங்குனி உத்திரம் ஏப்ரல் 10ஆம் தேதி பிற்பகல் 12 மணி முதல் தொடங்கி ஏப்ரல் 11ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு முடிகிறது. 2025ஆம் ஆண்டில் பங்குனி உத்திர திருநாள் ஏப்ரல் 11ம் தேதி வெள்ளிக்கிழமை அமைகிறது. ஏப்ரல் 12ஆம் தேதி காலை 04.13 மணி துவங்கி, ஏப்ரல் 13ஆம் தேதி காலை 06.03 மணி வரை மட்டுமே பெளர்ணமி திதி உள்ளது. இருந்தாலும் பங்குனி உத்திரம் என்பது நட்சத்திர அடிப்படையில் கொண்டாடப்படும் விரத நாள் என்பதால் உத்திரம் நட்சத்திரம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதியை பங்குனி உத்திர நாளாகும்.

பங்குனி உத்திரம் வாழ்த்து செய்தி:

முருகப்பெருமானின் அருளும் ஆசியும்

உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

பங்குனி உத்திரம் நல்வாழ்த்துக்கள்..!

Panguni Uthiram 2025 Wish (Photo Credit: Team LatestLY)

விரத முறை:

பங்குனி உத்திரம் அன்று விரதம் இருந்து, முருகனை வேண்டி மந்திர ஜபம் செய்வது, தியானம் செய்வது ஆகியவற்றை செய்வது சிறப்பு. இதனால் உடலும், மனமும் தூய்மையாகி, தெய்வத்தின் முழு அருளை பெற முடியும். தெய்வீக அருளால் கடந்த காலங்களில் செய்த தவறுகள் மன்னிக்கப்படும். இந்நாளில் விரதம் இருந்து பூஜை செய்து சிவபெருமான், முருகனை வழிபட்டால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், திருமண தடைகள், போன்றவை நீங்கி வாழ்வில் நல்ல நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

பூஜை முறைகள்:

பங்குனி உத்திரம் தினத்தன்று, முருகனுக்கு சிறப்பு பூஜைகள் (Panguni Uthiram Puja) நடைபெறும். முருகன் கோவிலுக்கு சென்று அந்நாளில் முருகனுக்கு நடக்கும் அபிஷேகங்களில் கலந்துகொள்ள வேண்டும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விரதம் இருந்து பங்குனி உத்திர நாளில் முருகனை வழிபடலாம். அதிகாலையிலேயே எழுந்து நீராடி, முருகன் சிலை மற்றும் வேல் வைத்திருப்பவர்கள் அதனை சுத்தம் செய்து முதலில் சுத்தமான தண்ணீராலும் பிறகு பன்னீராலும் அபிஷேகம் செய்யவும்.

பங்குனி உத்திரத்தில் பாலால் முருகனுக்கு அபிஷேகம் செய்தால், அமைய இருக்கும் திருமண வாழ்க்கையோ அல்லது ஏற்கனவே அமைந்துள்ள மண வாழ்க்கையோ பிரச்சனைகளில் இருந்தால் அவை நீங்கி சுபமான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம். திருமணமாகாதவர்கள், திருமண பந்தத்தில் இருப்பவர்கள் அனைவரும், முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் நல்லதே நடக்கும்.

மேலும், காலை முதல் இரவு வரை உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, இரவில் பால், பழங்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். திருப்புகழ் பாடுவது இந்நாளின் சிறப்பு பலன்களை கொடுக்கும். முருகனுக்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கலும், தேனும் திணைமாவும் படைக்க வேண்டும். 12 நெய் தீபங்கள் ஏற்றி வைத்து, முருகனை மனதார நினைத்து, வேண்டிய வரங்களை முருகனிடம் பெற்று கொள்ளலாம்.

பங்குனி உத்திரத்தில் பரிகார பூஜைகள் செய்வது நற்பலன்களை கொடுக்கும். காதல் கை கூட வேண்டும் என்று நினைப்பவர்களும், விரதம் இருந்து முருகனை வழிபட்டு அருளை பெறலாம். திருமண தடை இருப்பவர்களும் பங்குனி உத்திரத்தில் கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்வதன் மூலம், விரைவில் திருமணம் கைகூடி வரும்.