
பிப்ரவரி 20, சென்னை (Chennai News): பெண்களின் பருவங்களில் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது பூப்பெய்தல். இந்நிகழ்வு ஒவ்வொரு பெண்ணுக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழும். இது அவர்களின் மரபணு, உணவுப்பழக்க முறை,வாழ்வியல் சூழல், ஹார்மோன் மாற்றம் சார்ந்தது. முன்பெல்லாம் 12 வயது முதல் 15 வயது வரையில் பூப்படைதல் நடைபெறும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் 8 முதல் 10 வயதிலேயே பூப்பெய்தி விடுகின்றனர். இது சமீபகாலத்தில் இயற்கையானதாக தோன்றினாலும் இது பிற்காலத்தில் விளைவுகளையும் ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார் பாபா கிளினிகின் பெண்கள் & மகப்பேறு நல மருத்துவர் சுகன்யா ஆனந்தராமன்.
பருவ மாற்றம்:
மூளையில் உள்ள ஹைப்போதாலமாஸ் (Hypothalamus) பகுதியிலிருந்து சுரக்கும் `கோனாடாட்ராபின்-ரிலீஸிங் ஹார்மோன்’ (Gonadotropin-releasing hormone), பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டி, இருவகை ஹார்மோனைச் சுரக்கச் செய்யும். இவைகள் தான் பெண்களுக்கும் ஆண்களுக்கும் மார்பக வளர்ச்சி, முடி வளர்தல் போன்ற இரண்டாம் பாலின செயல்பாடுகளை நடைபெற வைக்கிறது.
பெண்களுக்கு இந்த பிட்டியூட்டரி சுரப்பியை சார்ந்து ஏற்படும் பூப்படைதலை, `சென்ட்ரல் பிரிகோசியஸ் பியூபெர்ட்டி’ (Central precocious puberty) என்றும், பிட்யூட்டரி சுரப்பி தொடர்பு இல்லாமல், நேரடியாக ஹார்மோன் தொந்தரவுகளால் வருவதை `பெரிபெரல் பிரிகோசியஸ் பியூபெர்ட்டி’ (Peripheral precocious puberty) என்றும் பூப்படைதலை இரு வகைகளாக பிரிக்கலாம். இந்த செயல்பாடுகள் குறைந்த வயதிலேயே தொடங்குவதால் தான் விரைவில் பூப்பெய்கின்றனர் என்கிறார் மருத்துவர் சுகன்யா. Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி 2025; நாள், விரத வழிபாடு மற்றும் சிவனை வழிபட உகந்த நேரம் குறித்த முழு விவரம் இதோ..!
காரணங்கள்:
முந்தைய தலைமுறையை விட தற்போது விரைவிலேயே பெண்கள் பூப்படைவதற்கு பல காரணங்களையும் விளக்குகிறார் சுகன்யா. குழந்தைகளை உடல் ரீதியான விளையாட்டுகள், செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை. மேலும் உணவுப்பழக்கத்திலும் மாற்றங்கள் ஏற்படுவதாலும், உடலில் அதிக எடை கூடுவதாலும் அதிவிரைவில் பூப்படைகின்றனர். மரபியல் காரணமாக ஏற்படும் பூப்பெய்தலில் பிரச்சனைகள் தோன்றாது. பாட்டி, தாய் போன்றோர் இயற்கையாகவே சிறுவயதிலேயே பூப்பெய்திருந்தால் குழந்தையும் விரைவில் பூப்படைய வாய்ப்புகள் உண்டு. தாமதமாக வருவதற்கும் மரபணு காரணமாக இருக்கும். எதுவாயினும் உடலில் மாற்றங்கள் இருப்பதாக தெரிந்தால் கட்டாயம் மருத்துவ ஆலோசனை தேவை.
குழந்தை பருவத்தில் பூப்படைவதற்கு முக்கிய காரணம் அதிகமாக ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதும், உடல் சார்ந்த செயல்பாடுகள் இல்லாமல் இருப்பதுமே காரணம். வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கடை உணவுகளைக் கொடுத்துப் பழக்கப்படுத்திவிடுகின்றனர். இது பல்வேறு பிரச்சனைகளை குழந்தைகளின் எதிர்காலத்தில் ஏற்படுத்தும். இது உடல் எடை அதிகரிப்பதுடன் குழந்தைகளை மன அழுத்தத்திற்கு அழைத்து சென்றுவிடும்.
பெற்றோர்கள் குழந்தைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க வேண்டும். 8 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு மார்பகங்கள் வளர்ச்சி அடைவது, பிறப்புறுப்பில் முடி வளர்தல், அக்குள் முகங்களில் முடி வளர்தல் போன்றவை இருப்பின் குழந்தைகளுக்கு ஹார்மோன் சோதனை செய்து கண்டறியலாம். அவ்வாறு குழந்தைகளுக்கு ஹார்மோன் பிரச்சனையாக இருந்தால் அதை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இயற்கையாக நிகழ்கிறது எனில் அதை குழந்தைகளுக்கு எளிதாக புரியும் படி ஆலோசனை கொடுத்தால் போதும். இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும்.
குழந்தைகளாக இருந்து பெண்களாக அடி எடுத்து வைக்கும் இவர்களுக்கு அச்சூழ்நிலையை கையாள்வது சற்று கடினமான காரியமாக இருக்கும். அதிலும் விரைவிலேயே பூப்படையும் குழந்தைகள் அதை எதிர்கொள்ள மிகவும் சிரமப்படுவர். அவர்களுக்கு நிச்சயமாக பெண்கள் நல மருத்துவரின் அலோசனை கொடுப்பது மிக அவசியம். அத்துடன் சிறுவயதில் பூப்பெய்பவர்களுக்கு எதிர்காலத்தில் சிக்கல் வராமல் இருக்க மருத்துவ ஆலோசனை படி உடலில் ஹார்மோன் பரிசோதனைகள் செய்ய வேண்டும். சரியான வயதில் பூப்பெய்துபவர்களுக்கு வீட்டில் சொல்லிதரும் பக்குவமுடையவர்கள் இருப்பின் மருத்துவ ஆலோசனை தேவைப்படாது.
விரைவில் பூப்படைபவர்களுக்கும் இயற்கையாக பூப்படைபவர்களுக்கும் எதிர்காலத்தில் மாற்றங்கள் கட்டாயம் உண்டு. ஏனெனில் இயற்கையாக நிகழும் மாற்றங்களை விட இதில் விரைவாகவே உடல் ரீதியான மாற்றங்கள் நிகழும். இதில் சிறுவயதிலேயே மன அழுத்தம், கவனச்சிதறல் ஏற்படும். மேலும் மகப்பேறு காலங்களிலும் சிக்கல்களை உருவாக்கும். மார்பக புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய்கள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. சிறுவயதில் பூப்படைவதை சாதாரணமாக நினைக்காமல் ஆரம்பத்திலேயே முறையாக சோதனைகள் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதிகாலை எழுந்திரிப்பது முதல் உறங்குவது வரையிலான செயல்பாடுகள் தான் இது போன்ற உடல் மற்றும் ஹார்மோன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது. குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவுகள், காய்கறி, பழங்கள் போன்ற சரிவிகித உணவுகளை கொடுக்க வேண்டும். குழந்தைகளின் எடைகளை அடிக்கடி கண்காணித்து வர வேண்டும். குழந்தைகள், அதிக எடை இருந்தால் அதை உடற்பயிற்சி, விளையாட்டுகள் மூலமாகவே குறைக்க வேண்டும். சரியான ஊட்டச்சத்துகள், வைட்டமின் டி சரியான அளவில் குழந்தைகளுக்கு கிடைத்தாலே இயற்கையான வளர்ச்சியைப் பெற்று பூப்படைவர்.
குழந்தைகள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இருப்பதற்கு அவர்களுடன் சிறிது நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட வேண்டும். பூப்பெய்தும் வயதில் உள்ளவர்களுக்கு பெற்றோர்கள் பூப்படைவது பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அந்நேரம் வருகையில் பதட்டம் பயமின்றி குழந்தைகள் தைரியமாக கையாள்வார்கள் என்கிறார் மருத்துவர் சுகன்யா ஆனந்தராமன்.