Thiruvathirai 2025 (Photo Credit: Team LatestLY / @MSivaRajan7 X)

ஜனவரி 09, சிதம்பரம் (Chidambaram News): மார்கழி மாதம் தொடங்கி முடியும் திருவாதிரை நட்சத்திரத்தில், திருவாதிரை நாள் ஆருத்ரா தரிசனமாக, நடராஜருக்கு உகந்த நாளாக கவனிக்கப்படுகிறது. திருவாரூர், சிதம்பரம் உட்பட நடராஜர் ஆலயங்கள் உள்ள ஊர்களில் திருவாதிரை பண்டிகை கோலாகலமாக களைகட்டும். 2025ம் ஆண்டுக்கான திருவாதிரை பண்டிகை ஜனவரி மாதம் 13ம் தேதி அன்று சிறப்பிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் 12ம் தேதி காலை 11:24 மணிமுதல் ஜனவரி 13, காலை 10:38 வரை நீடிக்கிறது. அன்றைய நாளில் பக்தர்கள் விரதம் இருந்து வழிபடுவதே திருவாதிரை விரதம், திருவாதிரை நோன்பு என அழைக்கப்படுகிறது. மார்கழி பௌர்ணமியும், திருவாதிரை நட்சத்திரமும் ஒன்று சேர்ந்து வரும் நாளில் ஆருத்ரா தரிசனம் எனப்படும் திருவாதிரை சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் நடராஜருக்கு சிறப்பு ஆராதனை, களி படையலுடன் வழங்கப்படும். திருவாரூர் தியாகராஜர் கோவிலிலும், தியாகராஜரின் பாத தரிசனத்திற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

திருவாதிரை களி வரலாறு:

சிதம்பரத்தில் பட்டினத்தாரிடம் கணக்குப் பிள்ளையாக பணியாற்றிய சேந்தனார், அவரின் மனைவி சிவ பக்தர்கள். ஒரு கட்டத்தில் சேந்தனார் அனைத்தையும் துறந்து துறவி வாழ்க்கையை ஏற்றுள்ளார். இதனால் அவரின் சொத்துக்கள் இல்லாதவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், விறகு வெட்டி அதில் வரும் பணத்தை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டுள்ளார். ஏழ்மை நிலையிலும் தினம் ஒரு சிவனடியாருக்கு உணவளித்து வந்த நிலையில், சம்பவத்தன்று அதிக மழை பெய்துள்ளது. Thiruvadhirai 2025: திருவாதிரை 2025 தேதி.., வரலாறு.. முழு விபரம் இதோ.! 

இதனால் விறகுகள் நனைந்து அதனை விற்க முடியாமல் அவதிப்பட்டு உள்ளார். பணம் இருந்தால் தானே காய்கள் வாங்கி சமைத்து சிவனடியாருக்கு படைக்க முடியும் என்ற நிலையில், கணவரின் வருத்தத்தை புரிந்து கொண்ட மனைவி வீட்டில் இருந்த உளுந்தை உடைத்து களி செய்து இருக்கிறார். சேந்தனாருக்கு மனம் சமாதானம் ஆகவில்லை எனினும், களியை சாப்பிட யார் வருவார்கள்? அதனை ஏற்றுக் கொள்வார்களா? என்ற ஐயமும் இருந்துள்ளது. அப்போது மழைக்கு ஒதுங்க வந்த ஒருவர், தனக்கு பசிப்பதாகவும் உணவு கொடுக்குமாறு கேட்டுள்ளார். அவருக்கு இன்புற்று களியை படைக்க, அவர் அதனை சாப்பிட்டுவிட்டு இப்படி ஒரு உணவை வாழ்நாளில் சாப்பிட்டதே இல்லை என்று கூறி, அதனை அமிர்தம் ஆகவும் விளக்கி இருக்கிறார். மீதமருந்த களியையும் அவர் கேட்டு வாங்கிக் கொண்ட நிலையில், மறுநாள் காலை சிதம்பரம் கோவிலை திறந்த அர்ச்சகருக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. நடராஜரின் வாய் மற்றும் கீழுள்ள பகுதிகளில் களி சிதறிக்கிடக்கவே, அரசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனவில் வந்தது நினைவுக்கு வந்தது:

பின் முதல் நாள் கனவில் சேந்தனார் வீட்டில் களி சாப்பிட்டதாக நடராஜர் உரைக்க, அது ஞாபகம் வந்து சேர்ந்தனார் கண்டறியப்பட்டார். இதுவே சிதம்பரத்தில் கலி படைக்க காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. கோவில் தேரோட்டத்தின் போது, தேர் நடுவில் நின்றுவிட சேந்தனாருக்கு பல்லாண்டு பாடுக என்ற ஒலி கேட்க, அவர் பல்லாண்டு பாடியதும் தேர் நகரத்தொடங்கியது. இதனால் சேந்தனாரின் இறை பக்தியை புரிந்து கொண்ட அரசன், சிவபெருமானின் திருவிளையாடல் நடந்துள்ளதாகவும், நடராஜருக்கு களி படைக்கும் வழக்கத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.