Beetroot Poriyal Recipe

ஜனவரி 21, சென்னை (Kitchen Tips): வீட்டில் தினமும் பொரியல் செய்வீர்களா? சில காய்கறிகளைக் கொண்டு பொரியல் செய்தால், சிலருக்கு பிடிக்காது. அப்படி, ஒரு பொரியல் தான் பீட்ரூட் பொரியல். ஏனெனில் பீட்ரூட் இனிப்பாக இருப்பதால், அந்த இனிப்புச் சுவையின் காரணமாக, அதை சாப்பிட விரும்ப மாட்டார்கள். ஆனால், பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே, இதனை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அப்படிப்பட்ட பீட்ரூட் வைத்து சுவையான பொரியல் (Beetroot Poriyal) எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பார்ப்போம். Carrot Chips Recipe: மொறு மொறுன்னு கேரட் சிப்ஸ் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

வறுத்து பொடி செய்வதற்கு தேவையானவை:

மல்லி - ஒன்றரை தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

வேர்க்கடலை - கால் கப்

கறிவேப்பிலை - 1 கொத்து

தாளிப்பதற்கு தேவையானவை:

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

வரமிளகாய் - 1

வெங்காயம் - 1

கறிவேப்பிலை - 1 கொத்து

பீட்ரூட் - 300 கிராம்

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

வறுத்த பொடி - 4 தேக்கரண்டி

தண்ணீர் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்கவும். பின், அதில் கறிவேப்பிலை சேர்த்து ஈரப்பதம் போக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
  • பின்பு, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின் அதில் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். அடுத்து, அதில் துருவிய பீட்ரூட்டை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
  • பின் அதில் மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு தூவி, சிறிது நீரைத் தெளித்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்தால், பீட்ரூட் நன்கு மென்மையாக வெந்திருக்கும். அதன்பின் பொடித்து வைத்துள்ள பொடியை 3 தேக்கரண்டி சேர்த்து கிளறிவிட்டு 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான பீட்ரூட் பொரியல் ரெடி.