
பிப்ரவரி 24, சென்னை (Kitchen Tips): அல்வா என்று சொன்னாலே அனைவருக்கும் நாக்கில் எச்சில் ஊறும். அதிலும், பிரட் அல்வா என்றால் அலாதி பிரியம். பிரியாணி சாப்பிட்ட பிறகு கடைசியாக பிரட் அல்வாவை எடுத்து, அதை பொறுமையாக ரசித்து சாப்பிடும் ருசியே தனி. பாயாசம், ஜாமூன் வரிசையில் தற்போது ஹோட்டல் மற்றும் திருமணங்களில் பிரட் அல்வா அதிகம் பரிமாறப்படுகிறது. இதனை சுலபமாக சீக்கிரம் செய்து முடித்துவிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும், இந்த பிரட் அல்வாவை (Bread Halwa) வீட்டில் எப்படி செய்வது என்பதை இதில் பார்ப்போம். Paal Rava Kesari Recipe: குழந்தைகளுக்கு பிடித்தமான பால் ரவா கேசரி செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
பால் - 2 கப்
பிரட் - 8 துண்டு
சர்க்கரை - முக்கால் கப்
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி - 10
திராட்சை - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- முதலில் பிரட் துண்டுகளை மிக்ஸியில் அரைத்து நன்கு பொடியாக்கி கொள்ளவும். இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். பால் சுண்டி கெட்டியாக வந்ததும் அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்பு, அடுப்பில் கடாயை வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது, அதே கடாயில் சர்க்கரை சேர்த்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி கரைய விடவும். கலவை கொதிக்க தொடங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள பிரட் தூளை சேர்க்க வேண்டும்.
- இவற்றை நன்கு கலந்து விடவும். அப்போதுதான் பிரட்டில் சர்க்கரை ஜீரா ஒன்றொடு ஒன்று சேரும். பின்பு, அதில் காய்ச்சி வைத்துள்ள கெட்டியான பாலை சேர்த்து அல்வா பதத்திற்கு கிளறிவிடவும். அதில், எண்ணெய் சேர்த்து கடாயில் ஒட்டாமல் பக்குவமாய் கிளறவும்.
- இறுதியாக, ஏலக்காய் தூள் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையை சேர்க்கவும். கடைசியாக சிறிதளவு நெய் ஊற்றி இறக்கினால், சுவையான பிரட் அல்வா ரெடி.