
மார்ச் 03, சென்னை (Kitchen Tips): பட்டர் பீன்ஸ் என அழைக்கப்படும் பெரிய அவரை பீன்ஸ் சேர்த்து செய்யும் குருமா மிக சுவையாக இருக்கும். பட்டர் பீன்ஸில் நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. எனவே, இது உடலுக்கு ஆரோக்கியமான சத்துகளை தரும். இந்த பட்டர் பீன்ஸ் குருமாவை சாதம் மட்டுமின்றி சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். சுலபமான முறையில், சுவையான பட்டர் பீன்ஸ் குருமா (Butter Beans Kurma) எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் பார்ப்போம். Podi Idly Recipe: சுவையான பொடி இட்லி செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
பட்டர் பீன்ஸ் - 2 கப்
தேங்காய் துருவல் - அரை கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
முந்திரி - 10
தயிர் - 2 தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில், பட்டர் பீன்ஸை குறைந்தது 8 மணிநேரம் ஊற வைக்கவும். ஊறிய பின், தண்ணீரை வடித்து பீன்ஸை தனியாக எடுத்து வைக்கவும். தேங்காய் துருவல் மற்றும் முந்திரியை ஒன்றாக சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைத்து கொள்ளவும்.
- பின், அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
- தக்காளி வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். மசாலா வாசனை போனதும், ஊற வைத்த பட்டர் பீன்ஸ் சேர்த்து மசாலாவுடன் கலந்து விடவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கடாயை மூடி பீன்ஸ் மென்மையாகும் வரை கொதிக்க விடவும்.
- அடுத்து, பீன்ஸ் வெந்ததும், அரைத்த தேங்காய், முந்திரி விழுதை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு, தயிர் சேர்த்து கொதிக்க விடவும். குருமா கெட்டியானதும், கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கினால், சுவையான பட்டர் பீன்ஸ் குருமா ரெடி.