
பிப்ரவரி 15, சென்னை (Kitchen Tips): இரவு நேரத்தில் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று தெரியவில்லை என்றால், வீட்டில் பட்டாணி இருந்தால், அதனைக் கொண்டு கிரேவி செய்யலாம். இந்த கிரேவியில் பட்டாணிக்கு பதிலாக காளான், மீல் மேக்கர், பன்னீர் என்று எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம். அப்படிப்பட்ட சப்பாத்திக்கு ஏற்ற சுவையான கிரேவி (Chapathi Gravy) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Kollu Kanji Recipe: உடல் எடையை குறைக்க.. கொள்ளு கஞ்சி செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
பட்டாணி - அரை கப்
வெங்காயம் - 3
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
முந்திரி பொடி - 2 தேக்கரண்டி
மல்லித் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கசூரி மெத்தி - சிறிதளவு
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
சுடுநீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அதனுடன் சிறிது உப்பு தூவி நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
- பின், அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்பு, அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, நீர் வற்றும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- பிறகு, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து மிதமான தீயில் வைத்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும். அடுத்து, முந்திரி பொடியை சேர்த்து கிளறி, கிரேவிக்கு தேவையான அளவு சுடுதண்ணீரை ஊற்றி, பச்சை பட்டாணியை சேர்த்து கிளறிவிடவும்.
- பின்னர், மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கி, கசூரி மெத்தியை கையால் நசுக்கி தூவி கிளறிவிட்டு இறக்கினால், சுவையான சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி கிரேவி ரெடி.