அக்டோபர் 30, சென்னை (Kitchen Tips): அல்வாவை மிஞ்சும் சுவையில் செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரையை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இது மிகவும் சுவையாகவும், வாயில் வைத்தவுடன் கரையும் தன்மை கொண்டது. அப்படிப்பட்ட சுவையான செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை (Chettinad Special Ukkarai) எப்படி செய்வது என்று இதில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1 கப்
ரவை - அரை கப்
தேங்காய் துருவல் - அரை கப்
பொடித்த வெல்லம் - 3 கப்
நெய் - 1 கப்
முந்திரி பருப்பு - 15
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு. Ribbon Pakoda Recipe: தீபாவளி ஸ்பெஷலாக ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
செய்முறை:
- முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானதும், பாசிப்பருப்பை போட்டு மிதமான தீயில் நன்றாக வறுத்து கொள்ளவும். பாசிப்பருப்பு பொன்னிறமாக வறுபட்டு வாசனை வந்தவுடன் அடுப்பை அணைத்து கொள்ள வேண்டும்.
- அடுத்து, வறுத்து வைத்துள்ள பாசிப்பருப்பை தண்ணீர் ஊற்றி, நன்றாக அலசி பாசிப்பருப்பை குக்கரில் போட்டு அதனுடன் 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
- பின் மிதமான தீயில் வைத்து குக்கரில் மூன்று விசில் வந்து அடங்கியவுடன், பாசிப்பருப்பை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி உருகியதும், ஒடித்து வைத்திருக்கும் முந்திரி பருப்பை போட்டு, பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
- அடுப்பில் ஒரு அடிக்கனமான பாத்திரத்தை வைத்து அதில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து தீயை மிதமாக வைத்து வெல்லம் கரையும் வரை கிளறிவிடவும். வெல்லம் முழுவதும் கரைந்ததும், கீழே இறக்கி சற்று ஆறியபின், தூசி இல்லாமல் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் அரை கப் அளவிற்கு நெய் சேர்த்து உருகியதும், தீயை மிதமாக வைத்து அதில் ரவையைப் போட்டு வாசனை போக பொன்னிறமாக வறுக்கவும்.
- ரவை பொன்னிறமாக வறுபட்டவுடன் அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து வறுத்துக்கொள்ளவும். ரவையும், தேங்காயும் பொன்னிறமாக வறுபட்டு வாசனை வந்தவுடன், வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து அடுப்பை லேசான தீயில் வைத்து 2 நிமிடங்களுக்கு விடாமல் கலந்துகொள்ள வேண்டும்.
- பாசிப்பருப்பு மற்றும் ரவை சேர்ந்து திக்கான பதத்திற்கு வந்தவுடன் வடிகட்டி வைத்துள்ள வெல்ல பாகை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கைவிடாமல் கிளறி விடவும். ஓரளவிற்கு கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் கால் கப் நெய் சேர்க்கவும்.
- நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி 2 நிமிடங்கள் கழித்து இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை ரெடி.