Vellarikai Kootu (Photo Credit: YouTube)

ஏப்ரல் 14, சென்னை (Kitchen Tips): கோடைகாலம் வந்துவிட்டாலே தர்பூசணி, வெள்ளரிக்காய் அதிகளவில் விற்பனை செய்யப்படும். வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து, உடலில் நீரேற்றத்தை அதிகரிக்க இவை இரண்டும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தவகையில், வெள்ளரிக்காயை அப்படியே மட்டும் தான் சாப்பிட்டிருப்போம். ஆனால், அந்த வெள்ளரிக்காயை சமைத்து சாப்பிட்டிருக்கிறீர்களா? வெள்ளரிக்காயைக் கொண்டு கூட்டு செய்தால், அதை சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். அப்படிபட்ட வெள்ளரிக்காய் கூட்டு (Cucumber Kootu) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். Kaalan Thokku Recipe: சுவையான செட்டிநாடு காளான் தொக்கு செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 250 கிராம்

கடலைப் பருப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு தேவையானவை:

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

அரைப்பதற்கு தேவையானவை:

துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி

வரமிளகாய் - 1

சீரகம் - 1 தேக்கரண்டி

அரிசி - 1 தேக்கரண்டி

செய்முறை:

  • முதலில் கடலைப்பருப்பை நீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். அதேப் போல் அரிசியையும் நீரில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • பின்னர் வெள்ளரிக்காயின் தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு, அதை பொடியாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு, ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பை கழுவிப் போட்டு, அதில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கடலைப் பருப்பை 90 சதவீதம் வேக வைக்கவும்.
  • ஒரு மிக்ஸியில் ஊற வைத்த அரிசியுடன், துருவிய தேங்காய், சீரகம், வரமிளகாய் மற்றும் சீரகத்தைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • கடலைப்பருப்பு வெந்ததும், அதில் வெள்ளரிக்காயை சேர்த்து, அரை கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து வெள்ளரிக்காயை மென்மையாக வேக வைக்கவும். வெள்ளரிக்காய் நன்கு வெந்ததும், அதில் அரைத்த தேங்காயை சேர்த்து கிளறிவிட்டு, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கலாம்.
  • இறுதியாக, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, கூட்டுடன் சேர்த்து கிளறினால், அவ்வளவுதான் சுவையான வெள்ளரிக்காய் கூட்டு ரெடி.