நவம்பர் 28, சென்னை (Kitchen Tips): மாங்காய் ஊறுகாய் பலவிதமாக செய்யப்படுகிறது. வடுமாங்காய் ஊறுகாய், அரிந்த மாங்காய் ஊறுகாய், சீவிய மாங்காய் ஊறுகாய், விதவிதமான மாங்காய்களை பயன்படுத்தி வெவ்வேறு விதமான மாங்காய் ஊறுகாய்களை செய்யலாம். கல்யாண வீடுகளில் செய்யப்படும் மாங்காய் ஊறுகாய் உடனடியாக செய்யப்படுவது ஆகும். இதனை செய்த உடனேயே அடுத்த அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்தில் பந்தியில் பரிமாறப்படும். கல்யாண பந்தியில் பரிமாறப்படும் அதே சுவையில் மாங்காய் ஊறுகாயை வீட்டிலேயே செய்யலாம். இந்த ஊறுகாய் சாம்பார் சாதம், ரசம் சாதம் ஆகியவற்றுக்கு செம்ம டேஸ்ட்டாக இருக்கும். கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் (Kalyana Veetu Manga Oorugai) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காண்போம். Pudina Pongal Recipe: சத்தான புதினா வெண்பொங்கல் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
மாங்காய் - 2
வர மிளகாய் - 30 கிராம்
கடுகு - 2 கரண்டி
வெந்தயம் - ஒன்றரை கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - 1 கரண்டி
பொடித்த வெல்லம் - 1 கரண்டி
நல்லெண்ணெய் - அரை கப்
கடுகு - ஒரு கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
கல் உப்பு - 2 கரண்டி
செய்முறை:
- முதலில் மாங்காயை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் ஒரு துணியால் சுத்தமாக துடைக்கவும். பின்னர், அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை வெயில் நேரத்தில் காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கடுகு, வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும். கடுகு பொரிந்து வெந்தயம் லேசான பொன்னிறமாகும் வரை இவற்றை நன்றாக வறுத்து, அதனை தனியே எடுத்து வைத்து ஆறவிடவும்.
- பின்னர், ஒரு மிக்ஸியில் காய வைத்துள்ள வர மிளகாயை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு ஸ்பூன் கல் உப்பு சேர்த்துக் கொள்ளவும். பிறகு, வறுத்து வைத்துள்ள கடுகு மற்றும் வெந்தயத்தை சேர்க்க வேண்டும்.
- இவை அனைத்தையும் நைசாக பொடித்து, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1/2 கப் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் நன்றாக சூடானதும் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து கொள்ளவும். கடுகு பொரிந்ததும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பை அனைத்து விடவும்.
- பிறகு, இதனுடன் ஒரு ஸ்பூன் சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும். அதனுடன் மிளகாய், உப்பு, கடுகு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து அரைத்த பொடியை சேர்க்கவும். நன்றாக கிளறிய பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள மாங்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- நன்றாக கிளறிவிட்டு, பின்னர் ஒரு ஸ்பூன் பொடித்த வெல்லம் சேர்த்து கலக்கவும். சுவையான கல்யாண பந்தி மாங்காய் ஊறுகாய் ரெடி. அதனை உடனடியாக பரிமாறலாம்.