ஜனவரி 24, சென்னை (Kitchen Tips): தினமும் வீட்டில் வழக்கமான சாம்பார், பொரியல் போன்றவைகளுக்கு பதிலாக, கிரேவி ரெசிபிகளை செய்து சாப்பிடலாம். அந்தவகையில், கத்திரிக்காய் வைத்து சுவையான கத்திரிக்காய் கிரேவி செய்யலாம். கத்தரிக்காயை பொதுவாக குழம்பு, பொரியல் போன்றவாறு சமைத்து சாப்பிடுவோம். ஆனால், கத்தரிக்காயை ஒரு வித்தியாசமான கிரேவியாக செய்து சாப்பிடலாம். இந்த கிரேவியானது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட சுவையான கத்தரிக்காய் கிரேவியை (Brinjal Gravy Recipe) எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் பார்ப்போம். Garlic Paneer Recipe: சுவையான பூண்டு பனீர் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையானப் பொருட்கள்:
பெரிய கத்திரிக்காய் - 4
தக்காளி - 2
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு (சூடான நீரில் ஊற வைத்தது)
கடுகு, மிளகு - தலா 1 கரண்டி
நாட்டுச் சர்க்கரை - அரை கரண்டி
மஞ்சள் தூள் - கால் கரண்டி
மிளகாய் தூள் - கால் கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 2 கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் புளியை சுடுதண்ணீரில் சுமார் 20 நிமிடம் ஊற வைத்து, நன்கு பிசைந்து அரை கப் சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு, அரைத்து பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- அதே மிக்ஸியில் தக்காளியைப் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கடாயையை அடுப்பில் வைத்து, அதில் 1 கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
- கத்திரிக்காயின் தோல் நிறம் மாறியதும், அதை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதே கடாயில் 1 கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, மிளகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின்பு, அதில் வெங்காய பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின்னர், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சில நிமிடங்கள் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதன்பின்னர் அரைத்த தக்காளியை ஊற்ற வேண்டும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மசாலாக்கள் வதங்கியதும் புளிச்சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 15 நிமிடம் குறைவான தீயில் நன்கு வேகவைக்கவும்.
- பிறகு மூடியைத் திறந்து, அதில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிவிட்டு, வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து, அரை கப் நீரை ஊற்றி கிளறி, கத்திரிக்காயை நன்கு வேக வைக்க வேண்டும். கத்திரிக்காய் நன்கு கீழே இறக்கி, அதில் கொத்தமல்லியைத் தூவிவிடவும். அவ்வளவுதான் சுவையான கத்திரிக்காய் கிரேவி ரெடி.