Masala Bread Recipe (Photo Credit: YouTube)

பிப்ரவரி 08, சென்னை (Kitchen Tips): மாலை நேரத்தில் ஸ்னாக் என்றாலே பொதுவாக பஜ்ஜி, வடை என்றுதான் சாப்பிடுவோம். அந்தவகையில், புதிய ஸ்னாக்ஸ் ஆக, வீட்டில் இருக்கும் சாதாரண பிரெட்டை வைத்தே மாலை நேரத்திற்கான சூப்பரான ஸ்னாக்ஸை செய்யலாம். இந்த காரசாரமான பிரெட் மசாலா மாலை நேரத்தில் டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். அப்படிபட்ட சுவையான பிரெட் மசாலாவை (Masala Bread) எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் காண்போம். Semiya Payasam Recipe: அட்டகாசமான சுவையில் சேமியா பாயசம் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையானப் பொருட்கள்:

பிரெட் - 8

எண்ணெய் - 2 கரண்டி

சீரகம் - 1 கரண்டி

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது - 1 கரண்டி

பாவ் பாஜி மசாலா - 1 கரண்டி

கரம் மசாலா - அரை கரண்டி

மிளகாய்த்தூள் - 1 கரண்டி

கசூரி மேத்தி - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

சாட் மசாலா - 1 கரண்டி

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் பிரெட் துண்டுகளை க்யூப்ஸாக வெட்டி தனியாக வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நன்றாக நறுக்கவும். அலங்கரிக்க சிறிது வெங்காயத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சீரகத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
  • அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை ஒரு நிமிடம் வதக்கவும். தக்காளி, உப்பு, கரம் மசாலா, பாவ் பாஜி மசாலா மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும். தக்காளி நன்கு வதங்கி மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின், 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி மசாலா கெட்டியாகும் வரை சமைக்கவும். கசூரி மேத்தியை உள்ளங்கையில் நசுக்கி அதில் சேர்க்கவும். ருசி பார்த்து, தேவையான அளவு உப்பு, மசாலாவை சரிசெய்துகொள்ள வேண்டும்.
  • பின்னர், பிரெட்டை இந்த கலவையில் சேர்த்து கிளறி, மசாலாவுடன் நன்கு ஒட்டும்படி கிளறவும். கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும், சாட் மசாலா மற்றும் நறுக்கிய வெங்காயத்தைத் தூவிவிடவும். அவ்வளவுதான் சுவையான மசாலா பிரெட் ரெடி.