Mint Rice (Photo Credit: YouTube)

அக்டோபர் 04, சென்னை (Kitchen Tips): தினமும் மதியம் சாம்பார், சாதம், கூட்டு, பொரியல், ரசம் என்று சாப்பிட்டுவதற்கு பதிலாக, வித்தியாசமான சுவையில் புதினா சாதம் (Pudina Sadam) செய்து சாப்பிடலாம். இந்த புதினா சாதம் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதனை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த புதினா சாதத்திற்கு வெங்காய பச்சடி வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். அப்படிப்பட்ட புதினா சாதம் (Mint Rice) எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். Mullangi Keerai Masala Recipe: முள்ளங்கி கீரை மசாலா சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 2 கப்

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)

பூண்டு - 20

இஞ்சி - 10 கிராம்

பச்சை மிளகாய் - 5

தேங்காய் துருவல் - 1 கப்

பட்டை, லவங்கம், அன்னாச்சி பூ - தலா 1

சோம்பு - 1 கரண்டி

மிளகு, பிரியாணி இலை - 1

நெய் - 1 கரண்டி

எலுமிச்சை சாறு - அரை கரண்டி

புதினா, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு, தண்ணீர், நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

  • புதினா சாதம் செய்ய முதலில், பாஸ்மதி அரிசியை தண்ணீரில் நன்கு கழுவி பிறகு அதை சுமார் 10 நிமிடம் ஊற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பட்டை, இலவங்கம், அன்னாச்சி பூ, மிளகு ஆகியவற்றை போட்டு சுமார் 30 வினாடிகள் வதக்க வேண்டும்.
  • பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சுமார் 5 நிமிடம் வதக்கவும். அதன்பிறகு அதில் தேங்காய் துருவல், புதினா, கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து சுமார் 2 நிமிடங்கள் வதக்கிக்கொள்ளவும்.
  • பின், இவற்றை ஒரு தட்டில் போட்டு நன்றாக ஆற வைக்கவும். அவை நன்கு ஆறியதும், அவற்றை ஒரு மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கரண்டி நெய் மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அடுத்து அதில் சோம்பு, கறிவேப்பிலை, நீளமாக நறுக்கிய வெங்காயம், பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும்.
  • பிறகு இதில் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கி, இதனை அடுத்து கழுவி வைத்த பாஸ்மதி அரிசியை இதனுடன் சேர்த்து, ஒரு முறை கிளறிவிட வேண்டும்.
  • இப்போது, இரண்டரை கப் அளவில் தண்ணீர் அதில் சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு, இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின் இதில் எலுமிச்சை சாற்றையும் சேர்த்து ஒருமுறை கிளறிவிடவும்.
  • அடுத்து குக்கரை மூடி 3 விசில் வைத்து இறக்கவும். குக்கரில் விசில் போனதும், ஒரு முறை கிளறிவிடவும். அவ்வளவுதான் சுவையான புதினா ரைஸ் ரெடி.