Rava Semiya Paniyaram (Photo Credit: YouTube)

ஜனவரி 03, சென்னை (Kitchen Tips): பெரும்பாலான வீட்டில் காலையில் இட்லி, தோசை தான் சாப்பிடுவார்கள். ஆனால், வீட்டில் இட்லி, தோசைக்கு மாவு தீர்ந்துவிட்டதா? வீட்டில் சேமியா, ரவை உள்ளதா? அப்படியானால் அந்த சேமியாவுடன் ரவையை சேர்த்து அட்டகாசமான சுவையில் குழிப்பணியாரம் சுடலாம். இந்த பணியாரம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். அந்தவகையில், ரவா சேமியா பணியாரத்தை (Rava Semiya Paniyaram) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Bun Halwa Recipe: மதுரை ஸ்பெஷல் பன் அல்வா செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

சேமியா - 1 கப்

ரவை - முக்கால் கப்

புளித்த தயிர் - முக்கால் கப்

தண்ணீர் - முக்கால் கப்

தாளிக்க தேவையானவை:

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

கேரட் - 1 (துருவியது)

இஞ்சி - சிறிய துண்டு

பெருங்காயத் தூள் - சிறிது

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

தண்ணீர் - அரை டம்ளர்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சேமியாவை சேர்த்து நன்கு வறுக்கவும். அதன்பின், அதில் ரவையை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைக்கவும்.
  • பின் அதில் புளித்த தயிரை ஊற்றி, அதனுடன் முக்கால் கப் நீரை ஊற்றி நன்கு கலந்து, மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • பிறகு, அதில் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வதக்கிக் கொள்ளவும்.
  • பின்னர் துருவிய கேரட்டை சேர்த்து, நிறம் மாறும் வரை வதக்கி இறக்கி, அதை ஊறிய ரவையுடன் சேர்க்க வேண்டும். பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைத தூவி, அரை டம்ளர் நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • இறுதியாக, பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், குழிகளில் எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை குழிகளில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, முன்னும் பின்னுமாக பொன்னிறமாக வேகவைத்து எடுத்தால், சுவையான ரவை சேமியா பணியாரம் ரெடி.