ஜனவரி 06, சென்னை (Kitchen Tips): வீட்டில் மதியம் சாதத்திற்கு சுவையான குழம்பு செய்ய வேண்டுமா? கறிக்குழம்பு சுவையில் தட்டைப்பயறு கொண்டு குழம்பு செய்யலாம். இந்த தட்டைப்பயறு குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும். அந்தவகையில், தட்டைப்பயறு குழம்பு சுவையாக எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தட்டைப்பயறு - 1 கப்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு. Kalyana Veetu Vatha Kulambu: கல்யாண வீட்டு வத்தக்குழம்பு செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
வதக்கி அரைக்க தேவையானவை:
சோம்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 8
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
தாளிக்க தேவையானவை:
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
குழம்பு மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2
உருளைக்கிழங்கு - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டைப்பயறை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், அந்த தட்டைப்பயறை குக்கரில் போட்டு, அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
- பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து பொரிய விட்டு, பின் அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். பின், அதில் துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி, ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு, அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வதக்கவும். அடுத்து, அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, நீர் வற்றும் வரை வதக்க வேண்டும். அதன்பின்னர், அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து, குறைவான தீயில் வைத்து வதக்கிக் கொள்ளவும்.
- பின் அதில் உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து, மசாலா உருளைக்கிழங்கில் சேரும் வரை கிளறி விட வேண்டும். பின்பு அதில் வேக வைத்துள்ள தட்டைப்பயறை நீருடன் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, நன்கு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். உருளைக்கிழங்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான தட்டைப்பயறு குழம்பு ரெடி.