Vazhaipoo Thuvaiyal Recipe (Photo Credit: YouTube)

பிப்ரவரி 07, சென்னை (Kitchen Tips): வீட்டில் வாழைப்பூ இருந்தால், பொதுவாக அதைக் கொண்டு பொரியல் அல்லது வடை என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால், அந்த வாழைப்பூவைக் கொண்டு ஒருமுறை துவையல் செய்து, சூடான சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள். ருசியாக இருக்கும். மேலும் இப்படி வாழைப்பூவை செய்து சாப்பிடும் போது, பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். வாழைப்பூ துவையல் (Vazhaipoo Thuvaiyal) எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1

தயிர் - 2 தேக்கரண்டி

உப்பு - சிறிதளவு

தண்ணீர் - தேவையான அளவு. Ragi Paal Kolukkattai Recipe: சுவையான ராகி பால் கொழுக்கட்டை செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

வதக்குவதற்கு தேவையானவை:

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி

கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி

இஞ்சி - 1 இன்ச்

கறிவேப்பிலை - 1 கொத்து

வரமிளகாய் - 5

புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு

கொத்தமல்லி - 1 கைப்பிடி அளவு

தேங்காய் - கால் கப் (பொடியாக நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு தேவையானவை:

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

  • முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின், அதை தயிர் மற்றும் உப்பு கலந்த நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பெருங்காயத் தூள், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து லேசாக வறுக்க வேண்டும்.
  • பின், அதில் இஞ்சி, கறிவேப்பிலை, வரமிளகாய், புளி சேர்த்து வதக்கி, கொத்தமல்லி மற்றும் தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு, அதே பாத்திரத்தில் உள்ள எண்ணெயில் ஊற வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி இறக்கவும்.
  • பின்னர், மிக்ஸியில் வதக்கிய பொருட்கள் மற்றும் வாழைப்பூ என அனைத்தையும் சேர்த்து, சிறிது உப்பு தூவி, நீரை சிறிது ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இறுதியாக, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள துவையலை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கினால், சுவையான வாழைப்பூ துவையல் ரெடி.