Thai Amavasai 2025 (Photo Credit: Team LatestLY)

ஜனவரி 23, சென்னை (Festival News): அமாவாசைகளில் மிக முக்கியமானதாக 'தை அமாவாசை' உள்ளது. இந்த தை அமாவாசையில் (Thai Amavasai) பல்வேறு சிறப்புகள் உள்ளது. முன்னோர்கள் வழிபாட்டிற்கும், சிவ வழிபாட்டிற்கும் ஏற்றதாகும். அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்குரிய சிறந்த நாளாகும். சமஸ்கிருதத்தில் "அமா" என்றால் ஒன்று சேருவது, "வாஸ்ய" என்றால் வசிப்பது என்று பொருள்படும். அதாவது, அமாவாசை என்பது முன்னோர்கள் ஒன்று சேர்ந்து பூமிக்கு வரும் நாள் என்பதை குறிப்பிடுவதாகும்.

தை அமாவாசை:

மாதத்தின் மத்தியில் வரும் திதியாக அமாவாசை உள்ளது. தமிழ் மாதங்களில் 10வது மாதமாக வரும் தை மாதத்தில் வரும் அமாவாசை மிக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. முன்னோர்களின் ஆசியை பெறுவதற்கு மிகவும் ஏற்ற நாளாகும். பித்ரு தோஷம் நீங்கி, செல்வம், ஆரோக்கியம், வெற்றி, மகிழ்ச்சி, அமைதி ஆகியவை கிடைப்பதற்கு வழிபட கூடிய நாளாகவும் அமைகிறது. தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக முன்னோர் வழிபாட்டினை முறையாக மேற்கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. Thai Shivaratri 2025: தை சிவராத்திரி 2025; மாத சிவராத்திரி சிறப்பு, வழிபாடு மற்றும் விரதம் இருக்கும் முறைகள் இதோ.!

தை அமாவாசை வழிபாடு:

தை அமாவாசையில் மொத்தம் 3 விதமாக முன்னோர் வழிபாடு செய்யப்படுகிறது. தர்ப்பணம், திலா ஹோமம், பிண்ட தர்ப்பணம் ஆகியவை செய்யப்படுகின்றன. நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கும் புனித தலங்களில் இவற்றை செய்வது வழக்கம். காசி, இராமேஸ்வரம், ஹரித்வார், பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமம், கூடுதுறைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது மிக மிக விசேஷமானதாகும். அன்றைய நாள் நாம் முன்னோர்களின் பெயரால் தானம் அளிப்பதாலும் முன்னோர்களின் ஆத்மா மகிழ்ச்சியடையும்.

தை அமாவாசை நாள் விவரம்:

2025ஆம் ஆண்டின் முதல் அமாவாசையாக வரும் தை அமாவாசை ஜனவரி 29ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. ஜனவரி 28ஆம் தேதி இரவு 08.10 மணிக்கு துவங்கி, ஜனவரி 29ம் தேதி இரவு 07.21 மணி வரை அமாவாசை திதி உள்ளது. அன்று புதன்கிழமை என்பதால் காலை 07.30 மணி முதல் 9 மணி வரையிலான நேரம் எமகண்டமாகவும், பகல் 12 மணி முதல் 01.30 மணி வரையிலான நேரத்தில் ராகு காலமும் உள்ளது. அதனால், இந்த நேரங்களை தவிர்த்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. தர்ப்பணம் கொடுப்பவர்கள் உச்சி காலத்திற்கு முன்பாகவே தர்ப்பணம் கொடுத்து விட வேண்டும் என்பது வழக்கம்.