ஆகஸ்ட் 11, சென்னை (Chennai News): இந்திய சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று, இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. சுமார் 200 ஆண்டுகளாக ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியால் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா, பல போராட்டங்கள் மற்றும் தியாகங்களுக்குப் பின்னர் சுதந்திரம் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தினத்தன்று, நாட்டின் பிரதமர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சர்கள் கொடியேற்றி உரையாற்றுவார்கள். மேலும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படும். 2025 சுதந்திர தினத்தை (Independence Day) முன்னிட்டு, ஓவியம் வரைய சில எளிமையான வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. Is It the 78th or 79th Independence Day? இந்தியாவின் 2025 சுதந்திர தின விழா 78 வது ஆண்டா? 79 வது ஆண்டா? விபரம் இதோ.!
1. தேசியக்கொடி (National Flag of India):
இந்திய தேசியக்கொடி "மூவர்ணக்கொடி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய தேசியக்கொடி பிங்கலி வெங்கய்யா என்பவரால் வடிவமைக்கப்பட்டது. 1947 ஜூலை 22ஆம் தேதி அன்று இந்திய அரசியலமைப்பு சபையால் தேசியக்கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது. கொடியின் நீளமும் அகலமும் 3:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். தேசியக்கொடியின் மேலே உள்ள காவி நிறம், தைரியம், தியாகம் மற்றும் மன உறுதி ஆகியவற்றைக் குறிக்கிறது. நாட்டின் முன்னேற்றத்திற்காக போராடியவர்களின் தியாகங்களை நினைவூட்டுகிறது. வெள்ளை நிறம், அமைதி, தூய்மை, நேர்மை மற்றும் உண்மை ஆகியவற்றைக் குறிக்கிறது. நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. பச்சை நிறம், இது செழிப்பு, வளர்ச்சி, நம்பிக்கை மற்றும் வளமான வாழ்க்கையைக் குறிக்கிறது. வளம் மற்றும் விவசாய செழிப்பு ஆகியவற்றை உணர்த்துகிறது. கொடியின் நடுவில் உள்ள வெள்ளை நிறப் பட்டையின் மையத்தில், 24 ஆரங்களைக் கொண்ட நீல நிற அசோகச் சக்கரம் உள்ளது. இது சட்டம் மற்றும் நீதியின் அடையாளமாக திகழ்கிறது.
தேசியக் கொடி வரைவது எப்படி? என்பதை கீழே உள்ள வீடியோவில் தெரிந்துகொள்வோம்.
2. மகாத்மா காந்தி (Mahatma Gandhi):
மகாத்மா காந்தி, இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தின் தந்தை ஆவார். அகிம்சை மற்றும் சத்தியாகிரகம் ஆகிய கொள்கைகளின் மூலம் இந்தியாவை சுதந்திரப் பாதையில் வழிநடத்தினார். இவர், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பல போராட்டங்களை முன்னெடுத்தார். ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவை அவற்றில் முக்கியமானவையாகும். பல லட்சக்கணக்கான இந்திய மக்களை விடுதலைப் போராட்டத்திற்கு ஒன்று திரட்டி, அன்பையும் அமைதியையும் உலகிற்கு எடுத்துரைத்த சுதந்திர போராட்ட தியாகி ஆவார்.
மகாத்மா காந்தி ஓவியம் வரைவது எப்படி? என்பதை கீழே உள்ள வீடியோவில் தெரிந்துகொள்வோம்.
3. பாரதியார் (Bharathiyar):
தமிழகத்தை சேர்ந்த பாரதியார், தீவிர இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், தனது எழுத்துக்களால் மக்களுக்குள் தேசபக்தி உணர்வை ஊட்டியவர். "வந்தே மாதரம்", "சுதந்திரப் பள்ளு" போன்ற அவரது கவிதைகள் மக்களை எழுச்சி பெறச் செய்தன. "அச்சமில்லை அச்சமில்லை" என்ற அவரது பாடல் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடத் தூண்டியது. அவரது பத்திரிகைகளான 'இந்தியா', 'பாலபாரதா' போன்றவை இந்திய சுதந்திரத்திற்காகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தன. அவரது எழுத்துக்கள் இந்தியர்களைப் போராடத் தூண்டின.
பாரதியார் ஓவியம் வரைவது எப்படி? என்பதை கீழே உள்ள வீடியோவில் தெரிந்துகொள்வோம்.
4. சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose):
"நேதாஜி" என அன்புடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு புரட்சிகரமான தலைவராக இருந்தார். "இந்திய தேசிய இராணுவம்" (INA) என்ற படையை நிறுவி, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டார். "எனக்கு ரத்தம் கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன்" என்ற அவரது முழக்கம் இன்றும் நினைவுகூரப்படுகிறது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஓவியம் வரைவது எப்படி? என்பதை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.
5. பகத் சிங் (Bhagat Singh):
இளம் வயதிலேயே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். ஆங்கிலேயே அரசாங்கத்திற்கு எதிராக புரட்சிகர நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார். அவரது தைரியம் மற்றும் தியாகம், இந்திய இளைஞர்களை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியது.
பகத் சிங் ஓவியம் வரைவது எப்படி? என்பதை கீழே உள்ள வீடியோ மூலம் தெரிந்துகொள்வோம்.