செப்டம்பர் 25, சென்னை (Festival News): பெண் சக்தியை போற்றிக் கொண்டாடும் தனித்துவமான பண்டிகையாக நவராத்திரி (Navratri 2025) சிறப்பிக்கப்படுகிறது. அன்னை ஸ்ரீ பார்வதி மகிஷாசுரமர்த்தினியாக அவதாரம் எடுத்து தீமையை அழித்து நன்மையைக் காத்த காலம் நவராத்திரியாக சிறப்பிக்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விமர்சையாக கொண்டாடப்படும் நவராத்திரி பராசக்தி வழிபாட்டுக்கும், அவரது அருளை பெறுவதற்கும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நவராத்திரி காலத்தில் விரத முறைகள் என்பது நாம் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியதாகும். நவராத்திரி காலத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என முக்கிய விதிகள் இருக்கின்றன. அதனை இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம். இந்த நவராத்திரி ஒன்பது நாட்களில் நகம் வெட்டுதல், முடி வெட்டுதல், போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். இந்த விஷயங்கள் அன்னை துர்கா தேவியை கோபப்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.
நவராத்திரி நாட்களில் இந்த விஷயங்களை செய்யாதீங்க :
வீட்டில் கொலு, கலசம் வைத்து வழிபாடு செய்வது என பண்டிகையை சிறப்பித்தால் காலையும், மாலையும் ஒரே நேரத்தில் வழிபாடு செய்வது நல்லது. அதேபோல விளக்கு ஏற்றி பூஜை செய்யும் போது வீட்டில் ஒருவராவது கட்டாயம் இருப்பது அவசியம். வெங்காயம், பூண்டு, மது, அசைவம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மசாலா இல்லாத சாத்வீக உணவுகளே அம்மன் விரும்புவார். கடைகளில் வாங்கி வந்து உண்பதை தவிர்த்து வீட்டிலேயே சுத்தமான, எளிதில் செரிமானம் அடையக்கூடிய உணவுகளை சாப்பிடலாம். எந்த சமயத்திலும் வீட்டில் வாக்குவாதங்கள், சண்டைகள் இல்லாமல் இருப்பது நல்லது. அமைதி, மகிழ்ச்சி போன்றவை நிலைத்திருக்க வேண்டும்.
பூஜை செய்வதில் கவனம் :
தியானம், பாராயணம் பாடுதல் போன்றவற்றை மேற்கொள்ளுதல் நல்லது. காலை, மாலை வேலைகளில் அன்னைக்கு உகந்த மந்திரங்களையும் சொல்லி சிறப்பிக்கலாம் இரண்டு வேளையும் கட்டாயம் பூஜைகள் செய்ய வேண்டும். சுத்தமான ஆடையை உடுத்தி பூஜை வழிபாடுகளை முன்னெடுக்க வேண்டும். கருப்பு, அடர் நீலம் போன்ற உடைகளை தவிர்க்கலாம். எலுமிச்சை பயன்படுத்தி உணவு ஏதும் சமைக்க வேண்டாம். பகல் நேரத்தில் தூங்காமல் இருப்பது நல்லது. இறையருளை பெற உகந்த காலம் நவராத்திரி என்பதால் பயம், எதிர்மறை எண்ணம், தோல்வி பயம் போன்றவை நீங்கி அமைதி கிடைக்க அம்மனின் வழிபாடு சிறப்பை தரும்.