Representative: Chennai MGR Central Station & Chennai Floods

டிசம்பர் 10, சென்னை: தமிழ்நாட்டிற்கு (Tamilnadu) என பல அடையாளங்கள் இருந்தாலும், மாநிலத்தின் தலைநகரான சென்னை (Chennai) உலகளவில் கவனத்தை பெரும் பட்டியலில் ஒன்றாகும். ஏனெனில் உலகிலேயே மிகநீண்ட கடற்கரை அமைந்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவில் தமிழகத்தின் மெரினா கடற்கரைக்கு முக்கிய இடம் உண்டு. அதுமட்டுமின்றி மாநிலத்தின் தலைநகராக சென்னை இருப்பதால் வேலைவாய்ப்பு, புதிய நிறுவனங்கள், அரசு சார்ந்த துறைகளின் தலைமையகம் என சிங்காரச்சென்னையாக அது இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏரிகள், குளங்களை ஆக்கிரமிப்பு செய்த மக்களின் வீடுகள் & அலுவலகங்கள் போன்றவை இடித்து தரைமட்டமாக்கப்பட்டு, மக்கள் அங்கிருந்து மாற்று இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அதாவது, சென்னை மாநகரில் இருந்து மேடான வெளிச்சென்னை பகுதிகளுக்கு அவர்கள் இடம்பெயர்த்தப்பட்டனர்.

Chennai City Heavy Flood - 2015 Visuals

சென்னையில் (Chennai Floods) கடந்த 2015 நவம்பர் இறுதியில் பெய்த மழையினால் அங்குள்ள பிரதான ஆறுகள், ஏரிகள் போன்றவை முழுவதும் நிரம்பி டிசம்பர் முதல் வாரம் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. பின்னர், ஒரேநாளில் வரலாறு காணாத அளவில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் அவசர கதியில் வெளியேற்றப்பட்டு சென்னை மாநகரமே நீரில் தத்தளித்தது. வாகன போக்குவரத்து நெரிசலால் தவிக்கும் சென்னையில் தண்ணீரும், படகுகளும் நிரம்பின.

சென்னை மாநகரின் கட்டமைப்பு ஆங்கிலேயர்களால் நூற்றாண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக அவை மாற்றம் இல்லாமல் தொடர்ந்து வந்தது. இதில், சுதந்திரத்திற்கு பின்னர் ஏற்பட்ட ஆக்கிரமிப்பு, மக்களின் சென்னை பயணம், வாழ்வாதாரத்தால் குடிசை போட்டு வீடு கட்டி ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிலங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன் நீர் வெளியேறும் தன்மை போன்றவை மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது என்று அனைவரும் உணர்ந்துகொண்டனர். Soorasamharam: சூரஸம்ஹார வரலாறு என்ன?.. பக்தகோடிகளே முருகனை தரிசிக்க தயாராக இருங்கள்..! 

இதற்கிடையில் மழை இல்லாத கோடையில் ஏரியில் நீர் வற்றி தண்ணீருக்கு அல்லாடும் சென்னை மாநகரம், மழைக்காலங்களில் நீரை வெளியேற்ற வழி இன்றி தவித்து வருவது வாடிக்கையானது. இன்று வரை ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீர் வெளியேற பல நடவடிக்கை எடுத்தாலும், அது எதோ ஒரு கட்டத்தில் பொய்த்து நிலைமை மீண்டும் மறுசுழற்சி முறையில் தொடர்கிறது. இதனை சரி செய்ய சென்னை மாநகரை முழுவதுமாக சீரமைப்பு பணிகளுக்கு உள்ளாக்க வேண்டும் என விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

Chennai Floods

இந்த பிரச்சனை ஒருபுறம் இருக்க, மற்றொரு புறத்தில் சென்னை மாநகரம் சில நூறு ஆண்டுகளில் தண்ணீரில் மூழ்கி அழியும் என்ற தகவலும் வெளியாகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தால் அது எதிர்காலத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள இடங்களில் கடல்நீர் மட்டத்தின் உயர்வினால் ஏற்படலாம் என்ற தகவல் தெளிவாகிறது. ஏனெனில், இன்றளவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் வழக்கத்திற்கு மாறான மழை, வெள்ளம், வெப்பம் போன்றவற்றை உலகம் சந்திக்க தொடங்கிவிட்டது.

இதனால் கடற்கரையோர பகுதிகளில் பாதிப்பு என்பது கட்டாயம் இருக்கும். அவை கடற்கரையில் இருந்து நிலத்திற்கு குறிப்பிட்ட தூரம் அளவு தனது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் நிதர்சனம். மழையினால் சென்னை மாநகருக்குள் தேங்கும் நீரினை வடிகால்கள் வாயிலாக வெளியேற்றவேண்டியது, அதற்கான கட்டமைப்புகளை மேற்கொள்ள வேண்டியது தான் இங்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்கப்படுகிறது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு பல பாலங்கள் அமைக்கிறது, புதிய நெடுஞ்சாலைகளை ஏற்படுகிறது. அதே செயல்திட்டம் நீர் மேலாண்மை & வெளியேற்றத்திற்கும் வேண்டும்.

உண்மையில் சென்னை அழியப்போகிறது என்றால், தொலைநோக்கு திட்டத்துடன் செயல்படும் எந்த அரசும் அதனை கண்டுகொள்ளாமல் இருக்கப்போவது இல்லை. திரைமறைவில் அதற்கான நடவடிக்கையை கட்டாயம் எடுக்கும். சென்னை அழியப்போகிறது என்றால் எதற்காக மெட்ரோ இரயில் திட்டம் உட்பட பல நடவடிக்கைக்கு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சென்னையின் அழிவு என்பது சாபமோ மர்மமோ இல்லை., அது நமது திட்டமிடலில் உள்ள சவால் தான். அதனை நாம் எதிர்கால சிந்தனையுடன் மேற்கொள்வதே சிறந்தது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 10,2022 09:06 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).