ஜனவரி 30, தொழுதூர் (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழ்துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் பொ. வேல் முருகன். அங்குள்ள தொழுதூர், நயினார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன், தினமும் கல்லூரிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று வழக்கம்போல தனது வீட்டிலிருந்து கல்லூரிக்கு புறப்பட்ட வேல்முருகன், தனது இரு சக்கர வாகனத்தில் சாலையில் பயணித்துக்கொண்டு இருந்தார். அச்சமயம், இவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென பக்கவாட்டு சாலையிலிருந்து மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சாலையின் நடுவே புகுந்தார்.
நொடியில் நடந்து முடிந்த துயரம்: இதனால் வாகனத்தை கட்டுப்படுத்த இயலாமல் திணறிய அவர், குறுக்கே புகுந்த இருசக்கர வாகனத்தின் மோதி விபத்தில் சிக்கினார். மேலும், அடுத்த நொடியே அவர் சாலையின் நடுவே விழுந்த நிலையில், அவ்வழியாகச் சென்ற தனியார் கல்லூரி பேருந்து சக்கரம் அவரது தலையின் மீது ஏறி இறங்கியது. இதில் பேராசிரியர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சொந்த ஊரான நைனார்பாளையம் அருகேயுள்ள கிராமத்தில் இருந்து கல்லூரிக்கு பணிக்கு வரும் வழியில், இருசக்கர வாகனம் - பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில், பேருந்தின் சக்கரத்தில் தலை சிக்கி சிதைந்து பலி.
— Sriramrpckanna (@Sriramrpckanna1) January 29, 2024
சாலை பயணங்களில் ஒவ்வொருவருக்கும் கவனம் தேவை: தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தகவல் கல்லூரி நிர்வாகத்திற்கும் தெரியவரவே, நேற்று ஒரு நாள் கல்லூரிக்கு முதல்வரால் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. பேராசிரியரின் மறைவு கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியர் விபத்தில் சிக்கிய பதைபதைப்பு காணொளியும் வெளியாகி இருக்கின்றன. சாலைகளில் பயணிப்போர் மட்டுமல்லாது, பிரதான சாலையை அணுகுவோர் சாலைகளில் வாகனங்கள் ஏதேனும் வருகிறதா? என்பதை பார்த்து வாகனங்களை இயக்குவது சாலச் சிறந்தது. இல்லையேல் நொடியில் நடக்கும் விபரீதம் இவ்வாறான உயிர் பறிப்பு சம்பவங்கள் நிகழ்த்தும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சியாகவும் அமைந்துள்ளது.
கல்லூரி பேராசிரியர் வேல்முருகன் எளிமையான குணம் கொண்ட நபர் ஆவார். எப்போதும் மாணவர்களிடம் நலன் பாராட்டி அன்பு கொண்ட பேராசிரியராக இருந்தவர் விபத்தில் மரணமடைந்த செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
சிசிடிவி காணொளி வீடியோ நன்றி: தந்தி டிவி