Tamilnadu Rains File Pic (Photo Credit : Youtube)

நவம்பர் 29, சென்னை (Chennai News): வங்கக்கடலில் உருவாகிய டிட்வா புயல் சென்னையில் இருந்து 430 கிமீ தொலைவில் மையம் கொண்டு இருக்கிறது. இந்த புயல் தொடர்ந்து 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயலின் தாக்கம் வடதமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழையை தந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தனுஷ்கோடி, கடலூர் சில்வர் பீச், புதுச்சேரி கடற்கரைகளில் மக்கள் செல்லாமல் இருக்க அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து வருகிறது. புயல் வங்கக்கடலில் தொடர்ந்து பயணித்து, சென்னைக்கு அருகில் சென்று பின் ஆந்திரா கடல் பகுதியில் வலுவிழக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. Tamilnadu Rains Holiday: அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை.. 7 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறை..! 

இன்றைய வானிலை நிலவரம் (Today Weather Update):

இதனிடையே, புயலின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புப்படி, இன்று (29-11-2025) வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மற்றும் அதனை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஏனைய கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.