Rain Tamilnadu (Photo Credit: @WeatherRadar_IN X)

அக்டோபர் 12, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்றைய வானிலை (Today Weather):

இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் தெரிவித்திருந்தது. நாளைய வானிலை: பருவமழை தொடக்கம்.. தமிழகத்தில் புரட்டிபோடப்போகும் கனமழை.. வானிலை நிலவரம்.!

மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, திருப்பூர், மதுரை மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை (Chennai Weather):

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.