ஆகஸ்ட் 26, டிரினிடாட் (Sports News): தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் (South Africa Tour Of West Indies 2024) மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான (WI Vs RSA) 2-வது டி20 போட்டி, இன்று (ஆகஸ்ட் 26) டிரினிடாட்டில் (Trinidad) உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அலிக் அதானாஸ் - ஷாய் ஹோப் ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அலிக் அதானாஸ் 28 ரன்களில் அவுட் ஆனார். இதனைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஷாய் ஹோப்பும் 41 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர், களமிறங்கிய ரோஸ்டன் சேஸ், நிக்கோலஸ் பூரன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனையடுத்து, ஜோடி சேர்ந்த கேப்டன் ரோவ்மன் பவுல்-ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரோவ்மன் பவுல் 35 ரன்களுக்கும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 29 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் அடித்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லிசாத் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளையும், பேட்ரிக் க்ரூகர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். Shikhar Dhawan Retirement: ஓய்வை அறிவித்த ஷிகர் தவான்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
பின்னர், 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரீஸா ஹென்ரிக்ஸ் - ரியான் ரிக்கெல்டன் இணை அதிரடியாக தொடங்கினர். இதில், ரியான் ரிக்கெல்டன் 20 ரன்களில் அவுட்டானார். ரீஸா ஹென்ரிக்ஸ் 44 ரன்களில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர், களமிறங்கிய கேப்டன் ஏய்டன் மார்க்ரம் 19 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 28 ரன்களுக்கும், ரஸ்ஸி வேண்டர் டுசென் 17 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 19.4 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஷமார் ஜோசப், ரொமாரியோ ஷெஃபெர்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருதை ரொமாரியோ ஷெஃபெர்ட் பெற்று சென்றார்.