
ஜூன் 06, கோவை (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் நேற்று (ஜூன் 05) தொடங்கியது. ஜூன் 05ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இந்நிலையில், இன்று (ஜூன் 06) ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (ITT Vs CSG, Match 2) அணிகள் மோதின. ITT Vs CSG: துஷார் ராஹேஜா அதிரடி அரைசதம்.. சேப்பாக் வெற்றிக்கு 174 ரன்கள் இலக்கு..!
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (Idream Tiruppur Tamizhans Vs Chepauk Super Gillies):
சாய் கிஷோர் தலைமையிலான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி, பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், டாஸ் வென்ற சேப்பாக் அணியின் கேப்டன் பாபா அபராஜித் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய திருப்பூர் அணிக்கு அமித் சத்விக் டக் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அடுத்து வந்த கே ராஜ்குமார் 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய துஷார் ராஹேஜா அரைசதம் (43 பந்துகளில் 79 ரன்கள்) அடித்து அவுட்டானார். இறுதியில், பிரதோஷ் ரஞ்சன் பால் (28 பந்துகளில் 38 ரன்கள்) அதிரடியாக விளையாட, திருப்பூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 173 ரன்கள் அடித்தது. சேப்பாக் அணி தரப்பில் அபிஷேக் தன்வர், விஜய் சங்கர் தலா 2 விக்கெட்கள், பிரேம் குமார், லோகேஷ் ராஜ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
சேப்பாக் அபார வெற்றி:
இதனையடுத்து களமிறங்கிய சேப்பாக் அணிக்கு ஆஷிக் 2 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த மோகித் ஹரிஹரன் அதிரடியாக விளையாடி 46 ரன்களில் அவுட்டானார். இதன் பின்னர், ஜோடி சேர்ந்த கேப்டன் பாபா அபராஜித் - விஜய் சங்கர் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். பாபா அபராஜித் 77* ரன்களுடனும், விஜய் சங்கர் 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சேப்பாக் அணி 16 ஓவர்களிலேயே 2 விக்கெட்களை இழந்து 174 ரன்கள் அடித்தது. இதன்மூலம், சேப்பாக் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.