IPL Logo (Photo Credit: @IANS X)

பிப்ரவரி 14, புதுடெல்லி (Sports News): 10 அணிகள் மோதிக்கொள்ளும் இந்திய அளவிலான ஐ.பி.எல் 2024 ஆட்டம், மார்ச் மாதம் 22ல் தொடங்கி மே மாதம் 26ம் தேதி வரை நடக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, ஜியோ சினிமா செயலி ஆகியவற்றில் நேரலையில் பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உட்பட 10 அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம், அடுத்த 2 மாதங்களுக்கு இந்தியாவில் பல கொண்டாட்டங்களுக்கு காரணமாக அமைக்கும். இந்தியாவில் உள்ள வெவ்வேறு மைதானங்களில் வைத்து போட்டிகள் நடைபெறும்.

பொதுத்தேர்தலால் தேதி மாற்றத்திற்கு வாய்ப்பு: 2024ம் ஆண்டில் இந்தியாவில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும். வாக்குப்பதிவு, தேர்தல் முடிவுகள் என மார்ச் மாதத்தின் இறுதி தொடங்கிவிட்டால் தேர்தல் பிரச்சாரம் போன்றவை களைகட்டும். இவ்வாறான சமயத்தில் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. முன்னதாகவே ஐ.பி.எல் போட்டிகளுக்கான பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டு இருந்தன. இந்நிலையில், ஐ.பி.எல் போட்டிகள் தள்ளிப்போகலாம் அல்லது தேதி மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய ஐ.பி.எல் தலைவர் அருண் சிங்க் துமல், "2024 ஐ.பி.எல் போட்டிகள் மார்ச் இறுதியில் தொடங்கலாம். பொதுத்தேர்தல் தேதிகள் உறுதி செய்யப்பட்டதும், அதற்கான பட்டியல்கள் வெளியிடப்படும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் ஐ.பி.எல் அறிவிப்பு: இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரை நாங்கள் மத்திய அரசுடன் உறுதி செய்திருக்கிறோம். அரசுடன் இணைந்து பணியாற்றுவோம். தேர்தல் தேதிக்காக தற்போது காத்திருக்கிறோம். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதும், அதற்கேற்ப திட்டமிடலுடன் செயல்பட்டு விளையாட்டுக்கான தேதிகள் அறிவிக்கப்படும்" என கூறினார். மார்ச் - மே மாதங்கள் தேர்தல் மட்டுமல்லாது, பள்ளி-கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகளும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.