அக்டோபர் 13, லாகூர் (Sports News): தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 டெஸ்ட் போட்டி, 3 டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா (PAK Vs SA 1st Test) அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி, நேற்று (அக்டோபர் 12) லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். IND Vs WI 2nd Test, Day 4: வெஸ்ட் இண்டீஸ் 390 ரன்களுக்கு ஆல் அவுட்.. இந்தியா நிதான ஆட்டம்..!
பாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் (Pakistan Vs South Africa, 1st Test):
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 110.4 ஓவர்களில் 378 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக இமாம்-உல்-ஹக் மற்றும் சல்மான் ஆகா தலா 93 ரன்களும், கேப்டன் ஷான் மசூத் 76 ரன்கள், முகமது ரிஸ்வான் 75 ரன்கள் அடித்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில், 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 67 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 216 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக டோனி டி சோர்ஜி 81* ரன்களுடன் களத்தில் உள்ளார். ரியான் ரிக்கல்டன் 71 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 4 விக்கெட்களை வீழ்த்தினார். தென்னாப்பிரிக்கா அணி இன்னும் 162 ரன்கள் பின்னிலையில் உள்ளது.
பாகிஸ்தான் அணி வீரர்கள்:
இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், ஷான் மசூத் (கேப்டன்), பாபர் ஆசம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான், சல்மான் ஆகா, ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, நோமன் அலி, சஜித் கான்.
தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்:
டோனி டி சோர்ஜி, ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், கைல் வெர்ரேய்ன், செனுரன் முத்துசாமி, ப்ரீனெலன் சுப்ரயன், ககிசோ ரபாடா, சைமன் ஹார்மர்.