Rajat Patidar (Photo Credit: @mufaddal_vohra X)

பிப்ரவரி 13, பெங்களூரு (Sports News): இந்தியாவில் வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்கும் ஐபிஎல் (IPL 2025) தொடரில், பல அணிகள் தங்களில் கேப்டன்களை முடிவு செய்து வருகின்றனர். அந்தவகையில், பஞ்சாப் கிங்ஸின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் கேப்டனாக ரிஷப் பந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக (RCB Captain) யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. RCB Captain: ஐபிஎல் 2025 போட்டியில், ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

கேப்டன் ரஜத் பட்டிதார்:

இந்நிலையில், 2025 ஐபிஎல் தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் (Captain Rajat Patidar) நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜத் பட்டிதாரை அந்த அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்தது ரசிகர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்பு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ.11 கோடிக்கு ரஜத் பட்டிதாரை தக்கவைத்தது. கடந்த ஐபிஎல் சீசனில் அவர் விளையாடிய 15 போட்டிகளில் 5 அரைசதங்களுடன், 395 ரன்களை அடித்திருந்தார். இதில், 33 சிக்ஸர்களும் அடங்கும். கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் ரஜ்த் பட்டிதார், இதுவரை 27 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 7 அரைசதங்கள் உட்பட 799 ரன்களை குவித்துள்ளார்.

யார் இந்த ரஜத் பட்டிதார்?

31 வயதான ரஜத் பட்டிதார், ஐபிஎல் 2022ஆம் ஆண்டு ஏலத்தின் போது எந்த அணியாலும் வாங்கப்படாத நிலையில், மாற்று வீரராக ஆர்சிபி அணிக்குள் இணைந்தார். அந்த ஆண்டு ஆர்சிபி அணி வாங்கியிருந்த லுவ்னித் சிசோடியா காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். எனவே, அவருக்கு பதிலாக ரஜத் பட்டிதார் (Rajat Patidar) அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்திற்கு அணியில் சேர்க்கப்பட்டார். அந்த சீசனில் சில முக்கியமான ஆட்டத்தில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். மேலும், உள்ளூர் போட்டிகளில் மத்திய பிரதேசம் அணியை சிறப்பாக வழிநடத்தினார். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், தற்போது ஆர்சிபி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு முன்னாள் கேப்டன் விராட் கோலி உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.