TNPL 2025 (Photo Credit: @HariCinemas_ X)

ஜூன் 05, கோவை (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 20 ஓவர் கிரிக்கெட் தொடர், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு, ரசிகர்களின் பேராதரவுடன் நடைபெற்று வருகிறது. இதுவரை 8 சீசன்கள் முடிவடைந்த நிலையில், அதிகபட்சமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 முறையும், கோவை கிங்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பேந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் தலா 1 முறையும் சாம்பியன் கோப்பையை வென்றுள்ளன. Kuldeep Yadav: சிறுவயது தோழியை கரம்பிடிக்கும் குல்தீப் யாதவ்.. விரைவில் திருமணம்.!

டிஎன்பிஎல் தொடக்கம்:

இந்நிலையில், டிஎன்பிஎல் 9வது சீசன் இன்று (ஜூன் 05) தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று (ஜூன் 05)தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. நடப்பு தொடரின், முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இன்று இரவு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் - கோவை கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

8 அணிகள் பங்கேற்பு:

நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பேந்தர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன், தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில், முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இந்த ஆண்டு பிளே ஆப் மற்றும் இறுதிப்போட்டி திண்டுக்கல்லில் நடக்கிறது.

பரிசுத்தொகை:

டிஎன்பிஎல் 9வது சீசன் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை 17 கோடி ஆகும். இதில், சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 50 லட்சமும், 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு 30 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

நேரலை விவரம்:

அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம்.