ஆகஸ்ட் 22, மெக்கே (Sports News): தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், நடந்து முடிந்த டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளையும், இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கும். மேலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம். நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. AUS Vs SA 2nd ODI: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா 2வது ஒருநாள் போட்டி.. நாளை பழி தீர்க்குமா ஆஸ்திரேலியா..?
ஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (Australia Vs South Africa):
இந்நிலையில், ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா (AUS Vs SA) அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, இன்று (ஆகஸ்ட் 22) மெக்கே நகரில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், தென்னாப்பிரிக்கா அணிக்கு பவுமாவிற்கு பதிலாக ஐடன் மார்க்ரம் கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 49.1 ஓவர்களில் 277 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மேத்யூ பிரீட்ஸ்கே 88 ரன்கள், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 74 ரன்கள் அடித்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஜாம்பா 3, சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், மார்னஸ் லாபுசேன் தலா 2 விக்கெட்கள், ஜோஷ் ஹேசில்வுட் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
தென்னாப்பிரிக்கா அபார வெற்றி:
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி துரத்தியது. ஆனால், ஆஸ்திரேலியா அணி 37.4 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோஷ் இங்கிலிஸ் 87 ரன்கள் அடித்து தனியாளாக போராடினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். தென்னாப்பிரிக்கா சார்பில் லுங்கி நிகிடி 5, செனுரான் முத்துசாமி மற்றும் நந்த்ரே பர்கர் தலா 2 விக்கெட்கள், வியான் முல்டர் 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதன்மூலம், தென்னாப்பிரிக்கா அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலையில் தொடரை கைப்பற்றியது. 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசேன், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, ஆரோன் ஹார்டி, சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்:
ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ரியான் ரிகெல்டன், டோனி டி சோர்சி, மேத்யூ பிரீட்ஸ்கே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் பிரெவிஸ், வியான் முல்டர், கேஷவ் மகாராஜ், செனுரான் முத்துசாமி, நந்த்ரே பர்கர், லுங்கி நிகிடி.