TGC Vs LKK 2nd Batting (Photo Credit: @TNPremierLeague X)

ஜூன் 17, சேலம் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். இத்தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையில் நடைபெற்று முடிந்தன. தொடர்ந்து, 2வது சுற்று லீக் ஆட்டங்கள் ஜூன் 13ஆம் தேதி முதல், ஜூன் 19ஆம் தேதி வரை வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று (ஜூன் 17) திருச்சி கிராண்ட் சோழஸ் - லைகா கோவை கிங்ஸ் (TGC Vs LKK, Match 15) அணிகள் மோதின. TGC Vs LKK: ராஜ்குமார் அதிரடி அரைசதம்.. கோவை வெற்றிக்கு 169 ரன்கள் இலக்கு..!

திருச்சி கிராண்ட் சோழஸ் எதிர் லைகா கோவை கிங்ஸ் (Trichy Grand Cholas Vs Lyca Kovai Kings):

சுரேஷ் குமார் தலைமையிலான திருச்சி அணி, ஷாருக்கான் தலைமையிலான கோவை அணியை எதிர்கொண்டது. இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், கோவை அணி 7 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில், டாஸ் வென்ற கோவை அணியின் கேப்டன் ஷாருக்கான் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய திருச்சி அணிக்கு வசீம் அகமது 32 ரன்னிலும், சிவசங்கரன் 25 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த கவுசிக் 5, ஜமால் 6 என அடுத்தடுத்து வெளியேறினர். நிதானமாக விளையாடி வந்த சஞ்சய் யாதவ் 32 பந்துகளில் வெறும் 27 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டானார். இறுதியில், ராஜ்குமார் அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 58* ரன்கள் அடித்தார். இதன்மூலம், திருச்சி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் அடித்தது.

திருச்சி அணி வெற்றி:

இதனையடுத்து, கோவை அணி 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தியது. ஆரம்பத்திலேயே ஜிதேந்திர குமார் 7 ரன்னில் ரன் அவுட்டானார். அடுத்து, சுரேஷ் லோகேஷ்வர் 11 ரன்னில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் ஷாருக்கான் 10 பந்தில் 2 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனையடுத்து, பாலசுப்ரமணியம் சச்சின் - ஆன்ட்ரே சித்தார்த் இணை நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அப்போது, சச்சின் 38 ரன்களிலும், சித்தார்த் 39 ரன்களிலும் அவுட்டாகினர். இறுதியில், கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 154 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம், திருச்சி அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.