நவம்பர் 02, மும்பை (Sports News): ஐபிஎல் 2025 டி20 (IPL 2025) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணி முதல் வீரராக விராட் கோலியை 21 கோடிக்கு தக்க வைத்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கிய முதல் சீசனில் இருந்து ஒரே ஐபிஎல் அணிக்காக விளையாடி வரும் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் விராட் கோலி (Virat Kohli). மேலும், ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் சாதனை படைத்துள்ளார். IPL 2025 Retention: ஐபிஎல் 2025இல் அனைத்து அணிகளிலும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் யார்? வாங்க தெரிஞ்சிக்கலாம்.!
இந்நிலையில், அடுத்த 3 வருடம் விளையாடி ஓய்வு பெறுவதற்குள் ஆர்சிபி அணிக்காக ஒரு கோப்பையாவது வென்று கொடுப்பதே இலக்கு என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், இந்த ஏலத்தில் ஒரு அணியை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அணியின் வெற்றிக்காக எப்போதும் போல எங்களின் சிறந்த செயல்பாடுகளை கொடுப்பேன். கிரிக்கெட்டை விளையாடும் விதத்தில் எங்களுடைய ரசிகர்களை பெருமைப்படுத்த முயற்சிப்பேன். எனக்கும் ஆர்சிபி அணிக்கும் கடந்த பல வருடங்களில் ஸ்பெஷல் தொடர்பை கொண்டுள்ளது. அடுத்த 3 வருடம் முடியும்போது நான் ஆர்சிபி அணிக்காக 20 வருடங்கள் விளையாடி முடித்திருப்பேன். அதுவே எனக்கு மிகவும் ஸ்பெஷலானதாகும்.
ஒரே அணிக்காக இவ்வளவு வருடங்கள் விளையாடுவேன் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை. இந்த அணியை விட்டு வேறு அணியில் இணைவதையும் என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று அவர் கூறினார். அந்தவகையில் விராட் கோலி மீண்டும் பெங்களூரு அணிக்காக விளையாட உள்ளார் என்பது அந்த அணி ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.