Karate Master Gebiraj 10 Years in Prison (Photo Credit: @NewsTamilTV24x7 X)

ஆகஸ்ட் 13, சென்னை (Chennai News): சென்னையில், மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்த வழக்கில், கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு, அண்ணா நகரில் உள்ள தனது கராத்தே, ஜூடோ தற்காப்புக் கலை பள்ளியில் பயிற்சியின்போது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கெபிராஜ் மீது பாதிக்கப்பட்ட மாணவி, 2021ஆம் ஆண்டு பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இதனையடுத்து, அண்ணா நகர் மகளிர் காவல்துறையினர், கெபிராஜ் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அதனை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றினர். Breaking: 'தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்துங்கள்' - காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

10 ஆண்டுகள் சிறை தண்டனை:

இந்த வழக்கு, சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மா முன்னிலையில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில், கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என தீர்ப்பளித்தார். தண்டனை குறித்த விசாரணை நேற்று (ஆகஸ்ட் 12) நடந்தது. அப்போது கெபிராஜ், தான் எந்த மாணவிகளுக்கும் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததில்லை என்றும், 7 ஆண்டுகளுக்குப் பிறகு புகார் அளிக்கப்பட்டுள்ளதால் தனது குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி கதறி அழுதார். இதனையடுத்து, அவருக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 13) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 50,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.