Thief | Coconut File Pic (Photo Credit: Pixabay)

ஜூன் 14, கள்ளக்குறிச்சி (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் என்பவரது மகன் குமரவேல். இவருக்கு, அதே கிராமத்தில் 5 ஏக்கரில் விவசாய நிலம் ஒன்று உள்ளது. இவருடைய விவசாய நிலத்தில் தென்னை, பலா, வாழை ஆகிய மரங்கள் உள்ளன. இந்நிலையில், குமரவேல் தனது உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், குமரவேல் ஊரில் இல்லாத நேரத்தில், அவரது விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி இரவோடு இரவாக இளநீரை பறித்துள்ளனர். மேலும், இளநீர் (Coconut Water) வெட்டி அதனை கயிறு மூலம் கீழே இறக்கி வெட்டி மகிழ்ச்சியுடன் குடித்துள்ளனர். Chia Seeds Benefits: சியா விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

இந்நிலையில், கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று நில உரிமையாளர் குமரவேல் அதிகாலை அவருடைய விவசாய நிலத்தை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அப்போது, தென்னை மரத்தில் இருந்து இளநீர் திருடுபோய் உள்ளது தெரியவந்தது. பின்னர், அருகில் உள்ள புளிய மரத்தில், நீலநிற சாட் அட்டையில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அதில், "இது எங்களுடைய 128-வது இளநீர் வேட்டை" என தலைப்பில், தீர விசாரிக்காதீர்கள் இதுவே இறுதியாகட்டும், மீறி விசாரித்தால் மீண்டும் வேட்டை தொடரும் நன்றி!!! எனவும் குறிப்பிட்டுள்ளனர். இப்படிக்கு என எழுதி அதன் கீழே "ஓம் சக்தி ஆதிபராசக்தி" எனவும், மேலும் "ஸ்சோத்திரம் ஆண்டவரே" லு.கா: 82-வது அதிகாரம் எனவும், "எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா" எனவும் அந்த சாட் அட்டையில் குறிப்பிட்டுள்ளனர். இறுதியாக, அதில் வேண்டுகோள் எனக் குறிப்பிட்டு, செவ்விளநீர் மரங்களை வளர்க்கவும், எச்சரிக்கை எனக் குறிப்பிட்டு, எங்களை கண்டுபிடிக்க இயலாது எனவும், நீலநிற சாட் அட்டையில் பெரிய ராமத்தைப் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.