Crime Scene (Photo Credit: Pixabay)

மார்ச் 10, ஸ்ரீவைகுண்டம் (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் (Srivaikuntam) அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் 17 வயதான மாணவர். இவர், திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று (மார்ச் 10) பள்ளிக்குச் செல்வதற்காக பேருந்தில் ஏறி ஸ்ரீவைகுண்டம் சென்று கொண்டிருந்தார். அப்போது, அரியநாயகிபுரத்திற்கு அடுத்த ஊரான கெட்டியம்மாள்புரம் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழிமறித்து உள்ளே இருந்த 17 வயது மாணவனை வெளியே இழுந்து போட்டனர். மேலும், கையில் வைத்திருந்த அரிவாளால் மாணவனை அந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. உடைந்த நிலையில் வெளியே தொங்கிய கதவு.. ஆபத்தான முறையில் இயக்கப்பட்ட அரசுப்பேருந்து..!

மாணவருக்கு அரிவாள் வெட்டு:

இதில், மாணவனுக்கு தலையில் பல வெட்டுகள் விழுந்தன. பேருந்தில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடினர். உடனே, பேருந்தில் வந்த சக பயணிகள் ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை ஆகியோர், வெட்டுக்காயங்களுடன் கிடந்த மாணவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் விசாரணை:

இதுதொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கபடி விளையாடுவதில் ஏற்பட்ட மோதலால் இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.