செப்டம்பர் 17, மயிலாடுதுறை (Mayiladuthurai News): மயிலாடுதுறை மாவட்டத்தில் அடியக்கமங்கலம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் வைரமுத்து (வயது 28), அப்பகுதியில் டூவீலர் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். கடந்த 10 ஆண்டாக அப்பகுதியை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இளம்பெண் சென்னையில் உள்ள ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வானிலை: தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுத்துக்கட்டப்போகும் கனமழை.. 36 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.!
காதல் விவகாரம்:
இந்நிலையில், இவர்களது காதல் விவகாரம் (Love Affair) பெண் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காதலை கைவிடுமாறு பெண்ணின் தாயார் தனது மகளை அடிக்கடி கண்டித்துள்ளார். இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்ணின் தாய், வைரமுத்து வேலை செய்யும் இடத்திற்கு சென்று, அங்கு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பெண், கடந்த வாரம் ஊருக்கு வந்துள்ளார். இதன்பின்னர், கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி பெண்ணின் குடும்பத்தினர் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
காதலன் வெட்டிக்கொலை:
இதனையடுத்து, காவல்துறையினர் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் வைரமுத்துவை தான் திருமணம் செய்வேன் கூறியுள்ளார். அப்பெண்ணை அவரது காதலன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 15) மதியம் காதலியை சென்னைக்கு அனுப்பிவிட்டு, இரவு 11மணிக்கு வைரமுத்து வீட்டிற்கு வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அடியக்கமங்கலம் அருகே 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரி வெட்டினர். தப்பி ஓடியபோதும், விடாமல் துரத்தி சென்று சரமாரி வெட்டிவிட்டு (Murder) அங்கிருந்து தப்பியோடினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த அவரை அப்பகுதியினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
3 பேர் கைது:
இதுதொடர்பாக வைரமுத்துவின் பெற்றோர், மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில், காதலியின் குடும்பத்தினர் தனது மகனை கொலை செய்ததாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக எஸ்பி ஸ்டாலின் கூறியுள்ளார்.