Heat Wave in Tamilnadu 16 Sep 2024 (Photo Credit: @ChennaiRMC X)

செப்டம்பர் 16, நுங்கம்பாக்கம் (Chennai News): இந்தியா முழுவதும் தென்மேற்குப் பருவமழை உச்சம் அடைந்து, வடமாநிலங்களில் வெள்ளம் ஆறுகளில் கரைபுரண்டு ஓடுகிறது. இமயமலைத்தொடரில் அமைந்துள்ள மாநிலங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்படுகிறது. இதனிடையே, வங்கக்கடலில் உருவாகி அடுத்தடுத்து ஆந்திரா, தெலுங்கானா, பீகார், மேற்குவங்கம், ஒடிசா, மத்திய பிரதேசம் மாநிலங்களை புரட்டியெடுக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் காரணமாக, தமிழ்நாட்டில் தொடர்ந்து வறண்ட வானிலையே நிலவி வருகிறது.

நாமக்கல்லில் மட்டும் நேற்று மழை:

இதனிடையே, சென்னை வானிலை (Chennai RMC) ஆய்வு மையம், இன்று வெளியிட்டுள்ள நாளைய வானிலை (Tomorrow) தொடர்பான செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை (Weather) நிலவி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் இரண்டு சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக மதுரையில் 40.2 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 18.8 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது. Thirumavalavan: தமிழக அரசியலில் புயலை கிளப்பிய திருமாவளவன்.. பரபரப்புக்கு முற்றுப்புள்ளி.. அதிரடி பேட்டி.. முழு விபரம் இதோ.! 

வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு:

அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தமட்டில், மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு பகுதிகளில் ஒரு சில இடங்களில் மற்றும் புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில், 16ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை காரணமாக அசௌகரியமும் உண்டாகலாம். ஒருசில இடங்களில் இரண்டு முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக பதிவாகும். தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.

வங்கக்கடல் & அரபிக்கடலில் சூறைக்காற்று:

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 16ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மன்னார்வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதி, அதனை ஒட்டிய குமரிக்கடல், வடக்கு வங்கக்கடல், வடக்கு ஒரிசா - மேற்குவங்க கடலோரப்பகுதி, தெற்கு வங்கக்கடல், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வரையிலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகம் வரையிலும் வீசக்கூடும். அதேபோல, அரபிக்கடல் பகுதிகளில் தென்மேற்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரையிலும், இடையிலேயே 65 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.