அக்டோபர் 17, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் கடந்த 2020ம் ஆண்டு பரவி, மக்களை வீட்டிற்குள் முடக்கி, பல கோடிக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸின் போது கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுப்போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் மாநில அளவில் அரசு மற்றும் தனியார் பேருந்து (Omni Bus Tamilnadu) போக்குவரத்து சேவை என்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இழப்பை காண்பித்து நிறுத்தப்பட்ட ஆம்னி பேருந்து சேவை:
2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்பட்ட பொதுப்போக்குவரத்து, கிட்டத்தட்ட 5 காலாண்டுகள் கழித்து, 2021 செப். மாதத்தில் 50% பயணிகளுடன் பேருந்தை இயக்கிக்கொள்ள அனுமதி வழங்ப்பட்டது. பின் 75% பயணிகளுடன் பேருந்து இயங்க அறிவுறுத்தப்பட்டு, மீண்டும் இரண்டாவது அலையால் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. இந்த சமயங்களில் ஆம்னி பேருந்து சேவை என்பது வழங்கப்படவில்லை. தங்களின் வாகனத்தில் குறைந்தளவு பயணிகள் பயணம் செய்தால், இழப்பு ஏற்படும் எனக்கூறி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை. வானிலை: அக்.23 வரை அடுத்த அலர்ட் கொடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்.. முழு விபரம் உள்ளே.!
வரியை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு மறுப்பு:
கிட்டத்தட்ட 5 காலாண்டுகள் ஆம்னி பேருந்து சேவை என்பது முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் கொரோனா பரவலுக்கு பின் பேருந்து உரிமையாளர்கள் சாலை வரியை செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த விசயத்திற்கு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, அரசு சாலை வரியை குறிப்பிட்ட மாத்திற்கு மட்டும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
நீதிபதிகள் உத்தரவு:
இதனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். கொரோனா காலத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பதால், சாலை வரிகள் வசூலிக்கப்படக்கூடாது. அரசு நிராகரித்த மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும். பெற்றுக்கொண்ட தொகையை விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். நீதிபதி இளஞ்செழியன் அமர்வில் நடந்த விசாரணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.