செப்டம்பர் 23, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலை மாற்றம் உருவாகியுள்ளதை குறிக்கும் வகையில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 23ஆம் தேதி வாக்கில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இதனால் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் வடதமிழகம், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வலுவான தரைக்காற்று ஒரு சில இடங்களில் 30 கிலோமீட்டர் வேகம் முதல் 40 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தனது வானிலை அறிவிப்பில் தெரிவித்து இருக்கிறது. Armstrong Murder Case: கே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரௌடி சீசிங் ராஜா சுட்டுக்கொலை; யார் இந்த ராஜா?..
தலைநகர் வானிலை நிலவரம் & வங்கக்கடல் செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இன்று முதல் 26 ஆம் தேதி வரை மன்னார்வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய குமரிக்கடல், தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் வேகம் முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரையிலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகம் வரையிலும் வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
அரபிக்கடல் செல்லும் மீனவர்களுக்கு அறிவுறுத்தல்:
அதேபோல, அரபிக்கடல் பகுதிகளில் 23ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக் கடல், மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகள், கர்நாடக-கேரள கடலோரப்பகுதி, அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதி ஆகிய இடங்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரையிலும், இடையிலேயே 65 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் வீசக்கூடும் என்பதால், இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.