ஆகஸ்ட் 21, மதுரை (Madurai News): மதுரை மாவட்டம், பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) 2வது மாநில மாநாடு இன்று (ஆகஸ்ட் 21) நடைபெறுகிறது. மாநாடு, முதலில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது தொண்டர்கள் சீக்கிரமாக வீடு திரும்பும் வகையில், மாலை 7 மணிக்கு மாநாட்டை நிறைவு செய்ய திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. வானிலை: அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்..!
தவெக 2வது மாநாடு முன்னோட்டம்:
முன்னதாக, தவெக கட்சியின் இரண்டாவது மாநாடு (TVK Madurai Maanadu) பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. முதலில், மாநாட்டுக்குத் தேவையான நாற்காலிகளை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டது. முதலில் 5 ஒப்பந்ததாரர்களிடம் இருந்து வாங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், 4 ஒப்பந்ததாரர்கள் கடைசி நேரத்தில் நாற்காலிகளை தர மறுத்ததால், ஒரு ஒப்பந்ததாரரிடம் இருந்து கிடைத்த 2 லட்சம் நாற்காலிகள் மட்டுமே இருந்தது. இதன்பின்னர், கேரளாவில் இருந்து நாற்காலிகள் வரவழைக்கப்பட்டன. நேற்று (ஆகஸ்ட் 20) மாலை 3 மணிக்கு, 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணியின் போது, கொடிக்கம்பம் சரிந்து, ராமநாதபுரத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகியின் கார் மோசமாக சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனிடையே, மாநாட்டிற்கான ஏற்பாடுகளை நேரில் பார்வையிட விஜயின் பெற்றோர் சந்திரசேகர்-ஷோபா ஆகியோர் நேற்று காலை மதுரை வந்தடைந்தனர். தவெக கட்சி தலைவர் விஜய் நேற்று மாலை மதுரை வந்தடைந்து, மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகிலுள்ள விடுதியில் தங்கியுள்ளார்.
மாநாட்டு நிகழ்ச்சி நேரம்:
இன்று மதியம் 3.00 மணிக்கு, தவெக கட்சியின் தலைவர் விஜய் (TVK Vijay) கொடியேற்றுவார். அதனைத் தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கட்சியின் உறுதிமொழி ஏற்பு நடைபெறும். பின்னர், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாலை 6.15 மணிக்கு கட்சி தலைவர் விஜய் உரையாற்றுவார். இறுதியாக, மாலை 7 மணியளவில் மாநாடு நிறைவடையும்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
தவெக மாநாட்டிற்கு வரும் 5 லட்சம் தொண்டர்களுக்கு, பிஸ்கட், அரை லிட்டர் குடிநீர் பாட்டில், மிக்சர், குளுக்கோஸ் அடங்கிய மொத்தம் 2 லட்சம் பைகள் வழங்கப்படவுள்ளன. மாநாட்டுப் பாதுகாப்புக்காக சுமார் 3500 காவலர்கள் மற்றும் 2500 பவுன்சர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில், பெண்களின் பாதுகாப்புக்காக 500 பெண் பவுன்சர்களும் உள்ளனர். தவெக தொண்டர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளுக்கு, மாநாட்டு அரங்கிற்குள் ஆம்புலன்ஸ் செல்ல தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தொண்டர்கள் அமரும் இருபுறமும் மருத்துவ முகாம்கள் உள்ளன. அங்கு, 600 மருத்துவர்கள் மற்றும் 45 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.