அக்டோபர் 19, சென்னை (Chennai News): நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக சிறப்பிக்கப்பட உள்ளது. தீபாவளி நாளில் ஏழை, பணக்காரர் என வேறுபாடு இல்லாமல் மக்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து, வீட்டை அலங்கரித்து, தீபமேற்றி, இனிப்புகள் பகிர்ந்து, பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கமாகும். சென்னை, பெங்களூர் போன்ற வெளியூர்களில் இருந்து பணியாற்றி வரும் பலரும், தீபஒளி (Diwali) பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் திரும்புகின்றனர். விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழிகாட்டுதலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது. Deepavali 2025: தீபாவளியில் மறந்தும் இந்த விஷயங்களை செய்யாதீங்க.. மகிழ்ச்சி பெருக செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்.!
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுரை:
- பட்டாசு வெடிக்கும் சமயங்களில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
- திறந்த வெளிகளில், பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடித்து மகிழ வேண்டும்.
- சுவாசம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் தீபாவளி அன்று வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
- பட்டாசு வெடிக்கும்போது தண்ணீர் வாளி, போர்வை, மணல் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம்.
- ஒருவேளை எதிர்பாராத விதமாக தீ பற்றி விட்டால் அதனை தண்ணீர் வாளியில் போட்டு அப்புறப்படுத்த வேண்டும்.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செருப்பு அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும்.
- வெறும் கைகளில் வைத்துக்கொண்டு பட்டாசை தூக்கிபோடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
- பட்டாசுகளை வெடித்த பின்னர் நன்கு சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும்.
- எரியும் மெழுகுவர்த்தி, விளக்கு போன்றவற்றை பட்டாசுகளுக்கு அருகில் வைக்க கூடாது.
- மின் கம்பங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
- தீ விபத்தினால் காயம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைக்கு சென்று தீக்காயத்துக்கான சிகிச்சையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
- பெரிய காயங்கள் என்றால் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- மாநில அளவில் அவசர செயல்பாட்டுக்காக 100, 101, 108 ஆகிய அவசர அழைப்புகளுக்கும் தொடர்பு கொள்ளலாம்.
- அவசரகால செயற்பாட்டு மையம் 94443 40496, 87544 48477 எண்களுக்கும் தகவல் அளிப்பது அவசியம்.
- அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் அழைத்தவுடன் பணிக்கு வரும் வகையில் அருகில் இருக்க வேண்டும்.
- அதேபோல் 424 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும்.