அக்டோபர் 15, தலைமை செயலகம் (Chennai News): தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தமிழகம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிககனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட, மாநகர அதிகாரிகள் வெள்ளம் ஏற்பட்டால் உடனடியாக செயல்பட போர்க்கால அடிப்படையில் தயாராக இருக்கின்றனர். வானிலை: இன்று தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை; அதிகாரபூர்வ அறிவிப்பு..!
இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள விபரம்:
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் நேற்றே அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் செயல்படும் பள்ளி-கல்லூரிகளுக்கும், விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும், கோவையில் மதியத்திற்கு மேல் அரைநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரி-காரைக்கால் மாவட்டத்திற்கும் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மாணவ-மாணவியரின் நலன் கருதி மழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்ய ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் பள்ளிகள் செயல்படும் வேலை நாளாகவும் அறிவிக்கப்படும்.