அக்டோபர் 19, சென்னை (Chennai News): நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக சிறப்பிக்கப்பட உள்ளது. தீபாவளி நாளில் ஏழை, பணக்காரர் என வேறுபாடு இல்லாமல் மக்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து, வீட்டை அலங்கரித்து, தீபமேற்றி, இனிப்புகள் பகிர்ந்து, பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கமாகும். சென்னை, பெங்களூர் போன்ற வெளியூர்களில் இருந்து பணியாற்றி வரும் பலரும், தீபஒளி (Diwali) பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் திரும்புகின்றனர். விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழிகாட்டுதலும் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசுகளை ஏற்படுத்தாத பட்டாசுகளை அனுமதிக்கப்பட்ட நேரங்களில் உரிய இடங்களில் வெடித்து மாசற்ற தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாளைய வானிலை: 18 மாவட்டங்கள் டார்கெட்.. தீபாவளிக்கு வருண பகவான் வைத்த வேட்டு.!
நாட்டு வெடியால் பறிபோன உயிர்கள்:
இந்த நிலையில் நாட்டு வெடி வெடித்து 4 நபர்கள் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. சென்னை ஆவடி அருகே தண்டுரை பகுதியில் வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் வீடு முழுவதும் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் வீட்டிற்குள் இருந்த சுனில், பிரகாஷ், கிரி, யாசின் உள்ளிட்ட 4 பேர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பட்டாபிராம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாட்டு வெடிகள் வெடிக்க வாங்கி வந்ததா? அல்லது வீட்டில் வைத்து விற்பனை செய்யப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.