நவம்பர் 23, நாமகிரிப்பேட்டை (Namakkal News): நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் இருந்து ராசிபுரம் நோக்கி தனியாருக்கு சொந்தமான சக்திவேல் என்ற பேருந்து ஒன்று நேற்று பயணம் செய்தது. இந்த பேருந்து நாமகிரிப்பேட்டை, மெட்டாலா கோரை ஆறு பகுதியில் வந்தபோது, திடீரென டயர் வெடித்ததாக தெரியவருகிறது.
3 பேர் பலி:
இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர்திசையில் வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர், பேருந்து ஓட்டுநர், ஒரு பெண் பயணி என 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உயிருக்கு துடிதுடித்தனர். வானிலை: காலை 10 மணிவரையில் 5 மாவட்டங்களில் மழை.. விபரம் உள்ளே.!
மீட்பு பணிகள்:
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர், ஜேசிபி உதவியுடன் இரண்டு வாகனத்தையும் பிரித்து விபத்தில் பலியானவர்களின் உடலை மீட்டனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்பகுதி நொறுங்கியது:
பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்த நிலையில், இரண்டு வாகன ஓட்டுனர்கள் மற்றும் பெண் பயணி என 3 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமாவும் நிகழ்விடத்திற்கு விரைந்து இருந்தார். விபத்தில் உயிரிழந்தோரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.