ஜூலை 03, திருநெல்வேலி (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம், வடக்கு தைக்கா தெருவில் வசித்து வரும் 35 வயதான நபர் நிஜாம். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 5 வயது மகன் உள்ளார். நிஜாம் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், இவரது மனைவி மகனுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சிறுவனுக்கு அவரது தாத்தா, பாட்டி ரம்புட்டான் பழம் சாப்பிடுவதற்காக வாங்கி வந்துள்ளனர். வானிலை: பலத்த காற்றுடன் 2 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ.!
கொட்டையுடன் ரம்புட்டான் பழத்தை விழுங்கிய சிறுவன் :
ஆசை ஆசையாக தனது பேரனுக்காக வாங்கி வந்த ரம்புட்டான் பழத்தை கொட்டை நீக்கி கொடுப்பதற்கு முன்பாகவே சிறுவன் ஆர்வத்துடன் விழுங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பழத்தின் கொட்டை சிறுவனின் தொண்டையில் சிக்கி மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டுள்ளார். இதனை கண்டு அதிர்ந்த தாத்தா, பாட்டி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச்செல்ல முற்பட்டுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவ பரிசோதனையில் சிறுவனின் உயிரிழப்பு உறுதி செய்யப்படவே, இது தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தகவலறிந்த தந்தை நிஜாம் வெளிநாட்டிலிந்து அவசர அவசரமாக திருநெல்வேலிக்கு புறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.