டிசம்பர் 21, சேரன்மகாதேவி (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி (Cheranmadevi) பகுதியில் வசித்து வருபவர் செல்லத்துரை. இவரின் மகன் மணிகண்டன் (வயது 21). இவர் தற்போது சென்னையில் செயல்பட்டு வரும் சட்டக்கல்லூரியில், இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். தற்போது விடுமுறையை முன்னிட்டு, நேற்று முனத்தினம் சொந்த ஊருக்கு வருகை தந்துள்ளார். மணிகண்டன், நேற்று காலை சேரன்மகாதேவி, முருகன் கோவில் பகுதியில் சென்றுகொண்டு இருந்தார்.
கல்லூரி மாணவர் கொலை:
அச்சமயம், அதே பகுதியில் வசித்து வரும் சிவராமன் என்பவரின் மகன் மாயாண்டி, மணிகண்டனை கத்தியால் குத்தி தப்பியோடினார். இதனால் படுகாயமடைந்த மணிகண்டன், அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
3 பேருக்கு வலைவீச்சு:
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த சேரன்மகாதேவி காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். இதனிடையே, நேற்று மாலை நேரத்தில் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர் மாயாண்டி உட்பட 3 பேரை தேடி வருகின்றனர். Tirunelveli Court: நீதிமன்ற வாசலில் பயங்கரம்; 4 பேர் கும்பலால் இளைஞர் வெட்டிக்கொலை..! திருநெல்வேலியில் கொடூரம்.!
பழிக்குப்பழியாக கொலை?
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டில் அம்பாசமுத்திரம், கோட்ராங்குளம் கிராமத்தில் இருக்கும் சொத்து தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் கொலை ஒன்று நடந்துள்ளது. இந்த கொலைக்கு பழிவாங்க மணிகண்டனின் உறவினருக்கு குறிவைக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்டவரின் மைத்துனரான மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
கொலைகளின் நகரமாக தென்மாவட்டங்கள்?
நேற்று காலை சுமார் 10:30 மணியளவில், பாளையங்கோட்டையில் இருக்கும் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் வாயிலில் மாயாண்டி என்ற இளைஞர், ஊராட்சி மன்ற தலைவரின் கொலைக்கு பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனிடையே தான் இந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது. கொலைகளின் தலைநகரமாக தென்மாவட்டங்களின் நிலை என்பது மாறி வருகிறது.