ஆகஸ்ட் 14, சென்னை (Chennai News): 1857-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான முதல் பெரிய கலகம் வெடித்தது. பின்னர், சுதேசி இயக்கம், காந்தியடிகளின் வருகை, சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பல போராட்டங்களினால் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்டு சுதந்திர நாடானது. சுதந்திரத்திற்குப் பின் இந்தியா பல பிரச்சினைகளை எதிர்கொண்டது. அனால் இன்று தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. சுதந்திர தினம் (Independence Day) என்பது வெறும் ஒரு நாள் அல்ல. அது நம் நாட்டின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாகும். தொடர்ந்து இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
தேசியக்கொடியை ஏற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், சுதந்திர தினவிழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். முப்படை அதிகாரிகள், மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றார். பின் திறந்த ஜீப்பில் காவல்துறையின் அலங்கார அணிவகுப்பை பார்வையிட்டார். தொடர்ந்து 4வது முறையாக முதல்வர் ஸ்டாலின் ஜார்ஜ் (Tami Nadu Chief Minister MK Stalin) கோட்டையில் கொடியேற்றிவைத்து மரியாதை செய்தார். PM Modi on Independance Day 2024: "2047ல் வளர்ச்சியடைந்த இந்தியா" - சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி.!
முதலமைச்சர் முக ஸ்டாலின் உரை: அதனைத் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், '' 'தாயின் மணிக்கொடி பாரீர் அதை தாழ்ந்து பணிந்து புகழ்திட வாரீர்' என்ற தேசியக்கவி பாரதியின் பாடல் வரிகளை பாடும் தகுதியை நமக்குத் தந்த இந்திய நாட்டு விடுதலை வீரர்கள் அத்தனை பேரையும் வணங்கி என் உரையை தொடங்குகிறேன். ரத்தத்தையே வேர்வையாக தந்து தங்கள் உடலையே விடுதலை உலைக்கு கொடுத்த எண்ணற்ற தியாகிகள் இந்திய மண்ணில் உண்டு. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகம் உண்டு. இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வெளிநாடுகளில் உதவியை பெற்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படை நடத்திய போது கரம் கோர்த்தவர்கள் தமிழ்நாட்டு வீரர்கள்.
சத்தியப் பாதையில் எத்தனை சோதனைகள் வந்தாலும், அதற்காக அணிவகுத்து நின்றவர்கள் தமிழ்நாட்டின் தியாகிகள். இவர்களின் தியாகத்தால்தான் விடுதலை காற்றை சுவைத்தோம். நமக்கான நாடு நமதே என்பதை உணர்ந்தோம். 77 ஆண்டுகளை கடந்துவிட்டது விடுதலை இந்தியா. தியாகிகளின் கனவான அனைவருக்குமான இந்தியாவை உருவாக்கி வளர்த்து வருகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை, ஒருமைபாடு, ஒருங்கிணைந்த வளர்ச்சி இவற்றின் ஒன்றுபட்ட வலிமையே நாட்டின் வலிமையாக உலகுக்கு காட்டி வருகிறோம். ஒருவண்ணமல்ல நமது தேசிய கொடி. அது மூவண்ணக் கொடி. நமது பன்முகத் தன்மையின் அடையாளம் இந்த கொடி.
திராவிட மாடல் என்றால் என்ன எனக் கேட்பவர்களுக்கு பல முறை பதிலளித்திருந்தாலும், இங்கு மீண்டும் அதை நினவு படுத்துகிறேன். சமூக நிதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியலின் அடித்தளத்தில் இருக்கும் இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம். தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். பொருளாதாரத்தில் மட்டும் வளர்ச்சி என்பது அல்ல. அது சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம், சமூகம், கல்வி, சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்திலும் இருப்பதுதான் உண்மையான வளர்ச்சி. அதுதான் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் காண விரும்பிய வளர்ச்சி.” என்றார். Independence Day 2024: களைகட்டிய 78வது சுதந்திர தின கொண்டாட்டம்; வாழ்த்து அட்டைகள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இங்கே..!
சிறப்பு திட்டங்கள்: தொடர்ந்து பல்வேறு சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார். '2026 ஜனவரி மாதத்திற்குள் சுமார் 75 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்; நந்தம்பாக்கத்தில் 56 ஏக்கர் நிலப்பரப்பில் நிதி நுட்ப நகரம்; எறையூரில் தொழில் பூங்கா; திருச்சி மற்றும் மதுரையில் புதிய டைட்டில் பூங்காக்கள்; விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, சேலம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மினி டைட்டில் பூங்காக்கள்; ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளை கையாளக்கூடிய வசதிகளுடன் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ஒரு புதிய பன்னாட்டு விமான நிலையம்; திருவள்ளூர் மாவட்டத்தில் 182 ஏக்கர் நிலப்பரப்பில் 1428 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா; கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுமார் 300 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா; தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இயங்கும் இஸ்ரோ விண்வெளி நிலையத்திற்கு அருகில் ஒரு விண்வெளி தொழில் பூங்கா மற்றும் திட எரிபொருள் பூங்கா ஆகியவற்றை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன' என்றார்.