ஜூன் 26, திருப்பத்தூர் (Tirupattur News): சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் (Chennai Central) இரயில் இரயில் நிலையத்தில் இருந்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூருக்கு (Mysore) தென்னக இரயில்வே (Southern Railway) சார்பில் தினமும் காவேரி விரைவு இரயில் சேவை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவில் மைசூரில் இருந்து புறப்பட்ட காவேரி அதிவிரைவு (Kavery Express) இரயில், சென்னை நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தது. நள்ளிரவு 03:30 மணியளவில் இரயில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், பச்சக்குப்பம் இரயில் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வந்துள்ளது.
அப்போது, இரயில் தண்டவாளத்தில் மர்ம நபர் சிமெண்ட் கல்லை வைத்துள்ளார். இதனை கண்டு சுதாரித்த ஓட்டுநர், துரிதமாக செய்யப்பட்டு இரயிலை நிறுத்தி இருக்கிறார்.
பின்னர் இதுகுறித்து பச்சக்குப்பம் இரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்த அதிகாரிகள் ஜோலார்பேட்டை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.
பின் தாமதமாக இரயில் புறப்பட்டு சென்ற நிலையில், தண்டவாளத்தில் கல் வைத்தது யார்? என அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், நள்ளிரவு நேரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தண்டவாளப்பகுதியில் உலாவி வந்தது தெரியவந்தது.
அவர் சிமெண்ட் கல்லை தண்டவாளத்தில் வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அவரை அதிகாரிகள் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். சம்பந்தப்பட்ட இளைஞர் மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்த்தவர் ஆவார்.
அவர் அங்கிருந்து வேலை பார்க்க தமிழகம் வந்திருந்த நிலையில், இங்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் அவரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என இரயில்வே காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.
நள்ளிரவு நேரத்தில் நடுவழியில் இரயில் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகளும் லேசான பதற்றத்திற்கு உள்ளாகினர். பின் இரயில் புறப்பட்டதும் அவர்கள் அமைதியடைந்தனர்.