செப்டம்பர் 26, இடைப்பாடி (Salem News): சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே திம்பதியான் வளவு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (வயது 25). இவர், கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றார். இவரது மனைவி குண்டுமல்லி. இவர்களுக்கு 5 குழந்தைகள் இருந்தனர். இதில், இரண்டு குழந்தைகள் இறந்து விட்டன. குடும்ப வறுமை காரணமாக அவர் தனது 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தையை புரோக்கர்கள் மூலம், விற்பனை (Child Sold) செய்துள்ளார். வானிலை: அடுத்த 1 வாரத்திற்கு தமிழ்நாட்டில் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
இந்நிலையில், குண்டுமல்லிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு, ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையையும் விற்பனை செய்ய, புரோக்கர்களான (Broker) இடைப்பாடி கவுண்டம்பாளையம் செந்தில்முருகன் (வயது 46), முனுசாமி (வயது 46) ஆகியோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் விசாரித்ததில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் ரூ.1 லட்சத்திற்கு குழந்தையை வாங்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், குழந்தையை முறைப்படி தத்து கொடுக்க வற்புறுத்தியுள்ளார். இதற்கு சேட்டு ஒத்து வராததால், சேலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஸ்ரீமுரளிக்கு, தேவராஜ் தகவல் கொடுத்தார். தகவலின்பேரில், அதிகாரிகள் சேட்டுவை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் சட்டவிரோதமாக ஏற்கனவே 3 குழந்தைகளை புரோக்கர்கள் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சேட்டு மற்றும் புரோக்கர்களான செந்தில்முருகன், முனுசாமி ஆகியோரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.