Died file pic (Photo Credit: Pixabay)

ஜூலை 30, வடலூர் (Cuddalore News): கடலூர் மாவட்டம், வடலூர் தர்மச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் (வயது 35). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கிஷோர் (வயது 15) என்ற மகனும், பரணிக்கா (வயது 10) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் வடலூர் சந்தைத்தோப்பு பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இதில் விளையாட்டில் ஆர்வம் கொண்ட கிஷோர் சிலம்ப போட்டியில் கலந்துகொண்டு மாவட்ட, மாநில அளவில் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 24-ஆம் தேதி மாலை மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் விளையாட்டு பயிற்சி நடைபெற்று வந்தது. அப்போது, ஈட்டி எறிதல் (Javelin Throwing) பயிற்சியின்போது மற்றொரு மாணவர் வீசிய ஈட்டி எதிர்பாராதவிதமாக கிஷோரின் தலையில் பாய்ந்து படுகாயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த ஆசிரியர்கள் மாணவனை மீட்டு, வடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து சென்னை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டார். இதனையடுத்து, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி மாணவர் கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தார். Dentist Arrested In Pocso Act: மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; பல் மருத்துவர் போக்சோவில் கைது..!

இதனால் மனமுடைந்த அவரது தாய் சிவகாமி, நேற்று ப்ளீச்சிங் பவுடரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நெய்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார். இதனையடுத்து, மூளை சாவு (Brain Dead) அடைந்த மாணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், அவரது கண்கள் மட்டுமே தானம் செய்யப்பட்டது.

மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்கையில், பள்ளியின் கணித ஆசிரியர் பிரவீன் குமார் அன்றைக்கு விளையாட்டு பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளது தெரியவந்தது. மேலும், பள்ளி நிர்வாகம் மற்றும் ஒரு ஆசிரியரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், ஆசிரியர் பிரவீன் குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.